CAA சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது.. டென்ஷன் ஆன எடப்பாடி!
சென்னை: சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுக-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார்.
மத்திய பாஜக அரசால் கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம் (CAA) கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதைத்தொடர்ந்து, இச்சட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்லது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது "சிஏஏ சட்டம் இன்னும் ஏழு நாட்களுக்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். அதற்கு நான் உத்தரவாதம்" என்றார்.

மத்திய இணை அமைச்சரின் இந்தக் கருத்து நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினும், மத்திய அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம் என உறுதிபடக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். மேலும், CAA விவகாரத்தில் அதிமுகவையும் சாடியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான CAA சட்டம் ஆனதற்கு முழுமுதற் காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான். மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்!" எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.
CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும்,
ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்.

ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக. கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.
சிறுபான்மை மக்களை பாதிக்கும் NIA, UAPA சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும். மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுக-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications