என்ன நடக்குதுன்னு பாருங்க.. டெல்லியில் டீமை இறக்கிய எடப்பாடி.. ரெடியாகும் அதிமுக.. 10 நாட்கள் தானா?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி டெல்லியில் லீகல் அணியை களமிறக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. இந்த பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் மேல்முறையீடு வழக்கு ஆகும். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

வாதங்கள் ஓவர்கள்
இந்த வழக்கில் கடந்த 10 நாட்களுக்கு முன்பே வாதம் முடிந்துவிட்டது. கடந்த வாரம் இந்த வழக்கில் எழுத்து பூர்வமான வாதங்களையும் இரண்டு தரப்பும் தாக்கல் செய்துவிட்டது. தற்போது வழக்கு தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் எடப்பாடி ஆதரவு தீர்ப்பு அல்லது ஓபிஎஸ் ஆதரவு தீர்ப்பு, அல்லது தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கட்டும் அல்லது வழக்கை சிவில் கோர்ட்டில் அணுகுங்கள் என்று 4 விதமான தீர்ப்புகள் வர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொண்டு உள்ளது.

10 நாட்கள்
ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸின் யுவராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கே தமிழ் மாநில காங்கிரசுக்கு பதிலாக அதிமுகவே போட்டியிடும் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்னுடைய அணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

சின்னம் முடங்கும் நிலை
கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இன்னொரு பக்கம் பாஜக இங்கே போட்டியிடுகிறது என்றால் நாங்கள் விலகிக்கொள்வோம், என்றுள்ளார். இது அதிமுகவில் பெரிய மோதலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிமுகவில் சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. உதாரணமாக தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்தாலும், இரட்டை இலை சின்னம் ஒரு தரப்பிற்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம்தான் ஒதுக்க வேண்டும். இதில் இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும்.

ஆதரவு
இப்போது தீர்ப்பு எடப்பாடிக்கோ, ஓ பன்னீர்செல்வத்திற்கோ ஆதரவாக வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியே வந்தாலும் கூட தேர்தல் ஆணையம் அந்த நபரின் தரப்பிற்கு ஆதரவாக முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முக்கியமாக தேர்தல் நேரத்தில் பிரச்சனை வேண்டாம் என்று சின்னத்தை முடக்கிவிட்டு, தேர்தலுக்கு பின் முடிவு எடுக்கவே வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் லீகல் அணியை களமிறக்கி உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடக்கும் நிலவரங்களை கண்காணிக்கவும், தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்தை அணுகவும், தீர்ப்பு வருவதை பொறுத்து நடவடிக்கைகளை எடுக்கவும் வசதியாக எடப்பாடி லீகல் டீமை டெல்லியில் தயார் நிலையில் இருக்கும்படி அறிவித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications