மார்ச் 9.. அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு.. ஈபிஎஸ்ஸின் அடுத்த அதிரடி..திரும்பும் ஓபிஎஸ்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியடைந்தது ஒரு பக்கம் இருக்க, ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் மத்தளம்போல் 2 பக்கமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அடி விழும் நிலையில் அவர் அடுத்தக்கட்ட நடவடிக்கையை துவங்கி உள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் கடந்த ஆண்டு பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக மாறினார். மேலும் ஓ பன்னீர் செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்தார்.
2022 ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் தான் இதுதொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என அறிவித்தது.

இடைத்தேர்தல் தோல்வியால் விமர்சனம்
மேலும் உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கு இருக்கும்போதே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இரட்டை இலை தொடர்பான இடையீட்டு மனுவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் வெற்றி கிடைத்தது. அவர் அறிவித்த தென்னரசு தான் இரட்லை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இருப்பினும் அவர் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் தோல்வியடைந்தார். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தேர்தல் தோல்வியை வைத்து ஓ பன்னீர் செல்வம் துரோகி என எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வழக்கு மற்றொரு புறம்
மேலும் 2022 ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பில் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளது. இது சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மார்ச் 17 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவான தீர்ப்பு வந்தால் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி கூட பறிபோகலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வழக்கு முடிய சில காலம் ஆகும் என்பதால் தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. மாறாக அவருக்கு பதவி என்பது இந்த தீர்ப்பை பொறுத்து தான் அமையும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மார்ச் 9 ல் ஆலோசனை
இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். மார்ச் 9 ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நடைபெற உள்ளது. ஒரு பக்கம் ஈரோடு கிழக்கு தோல்வி மறுபக்கம் ஓ பன்னீர் செல்வம் தரப்பு தொடர்ந்துள்ள வழக்கு என 2 பிரச்சனை எடப்பாடி பழனிச்சாமியின் முன்பு உள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக
இந்த கூட்டத்தில் தற்போது அதிமுகவில் நிலவும் பிரச்சனைகள் பற்றி தலைவர்கள் விவாதிக்கலாம் என கூறப்படும் நிலையில் முக்கியமாக நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தில் கட்சியை பலப்படுத்தும் பணியில் மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக செயலாற்றுவது பற்றி இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அட்வைஸ் வழங்கலாம் என கூறப்படுகிறது.

நிரூபிக்க வேண்டிய கட்டாயம்
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என இரட்டை தலைமை இருந்த போதிலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றை தலைமையில் அதிமுக செயல்படும்போதும் கூட இன்னும் தேர்தலில் வெற்றியை பதிவு செய்யவில்லை. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தனது தலைமை பண்பை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் தனது தலைமையில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் அதிமுக வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளதாக கூறப்படும் நிலையில் அதுதொடர்பான ஆலோசனைகளை அவர் வழங்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் மீது ஓ பன்னீர் செல்வம் அணியினரின் பார்வை திரும்ப உள்ளது.












Click it and Unblock the Notifications