பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம்.. தேதி குறித்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வரும் டிசம்பர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை வானகரத்தில் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(VII) மற்றும் 25(II)-ன்படி, வருகின்ற 15.12.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
வரும் 2026ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனையொட்டி நடைபெற்று வரும் அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் அடுத்தடுத்து நிர்வாகிகள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்தச் சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்தப் பொதுக்குழுவில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்துவது. கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களைச் சரி செய்வது, சட்டமன்றத் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications