அதிமுக- தவெக கூட்டணி? துணை முதல்வர் விஜய்? சரமாரி கேள்விகள்- எடப்பாடி பழனிசாமி சுளீர் பதில்கள்!
சென்னை: அண்ணா திமுக- நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்குமா என்ற யூகமான கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா திமுகவின் வாக்குகளை எந்த சூழ்நிலையிலும் நடிகர் விஜய்யால் ஈர்க்கவோ பிரிக்கவோ முடியாது; நடிகர் விஜய் எம்ஜிஆரை புகழ்ந்து பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் மாநாடு நடத்துகின்றனர். இந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அதன் தலைவர் திரைப்பட நடிகர் சகோதரர் விஜய், மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அவருடைய அழைப்பை ஏற்று அவரது ரசிகர்கள், அவருக்கு துணையாக நிற்கும் விதமாக அந்த மாநில மாநாட்டில் பங்கேற்று நடைபெற்று முடிவடைந்துள்ளது.

கூட்டணி ஆட்சி என்பது விஜய் கொள்கை: ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் "கூட்டணி ஆட்சி" என்பதை நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். அதில் போய் அது சரியா? இது சரியா? என நாம் சொல்ல முடியாது.
அதிமுக கூட்டணியா?: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. நடிகர் விஜய் இப்போதுதான் கட்சியை தொடங்கி இருக்கிறார்... முதல் மாநில மாநாட்டை நடத்தி இருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. தேர்தல் கூட்டணி என்பது அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு அமைக்கப் போகிறோம்.
சிறப்பான அதிமுகவை பாராட்டிய விஜய்: நடிகர் விஜய், அதிமுகவை விமர்சிக்கவில்லை என்பது அதிமுக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதாகவே அர்த்தம்.
பாஜக, திமுக விஜய் விமர்சனம்: ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் மறைமுகமாக பாஜகவையும் நேரடியாக அதிமுகவையும் எதிரிகளாக நடிகர் விஜய் சொல்லி இருப்பது அவரது கட்சியின் கருத்து. அந்த கட்சியின் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் கருத்து தெரிவிப்பது அவரது சுதந்திரம். ஒரு கட்சியின் தலைவராக என்ன என்ன செயல்படுவோம் என விளக்கி இருக்கிறார். அதில் போய் சரியா? தவறா? என சொல்ல முடியாது. அதிமுகவுக்கு என ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கைப்படிதான் நாங்கள் நடப்போம். அப்படிதான் ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை இருக்கிறது.
கொள்கையே இல்லாத திமுக கூட்டணி ஏன் தெரியுமா?: கொள்கையே இல்லாத ஒரு கட்சிதான் திமுக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள்தான். நாங்கள் எல்லாம் "ஒத்த" கொள்கையுடைய கட்சிகள் என்கிறார் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள். அப்படி எனில் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான் இருக்கிறதா? அப்படி எனில் எதற்கு தனித் தனி கட்சி? ஒரே கட்சியாக இருந்துவிட்டு போகலாமே?

கூட்டணி- கொள்கை வெவ்வேறு: அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. எங்களுடைய கொள்கைப்படிதான் எங்கள் தலைவர்கள் ஆட்சி புரிந்தனர்; அதேபோல கூட்டணி என்பது தேர்தலைப் பொறுத்ததாக இருக்கும்.
விஜய்க்கு துணை முதல்வர் பதவியா?: விஜய் துணை முதல்வர் பதவி கேட்டு கூட்டணி வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என்ற கற்பனையான கேள்விகளுக்கு எல்லாம் எப்படி பதில் சொல்ல முடியும்? ஊடகங்களில் பரபரப்பான செய்திக்காக இப்படி கேள்விகளை போட்டுக் கொடுத்து வாங்குகிறீர்கள். அண்ணா திமுகவுக்காக எங்கள் தலைவர் வகுத்த கொள்கைகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பதுதான். கொள்கை என்பது நிலையானது. ஆகையால் நிலையான கொள்கை அடிப்படையில் வழிகாட்டுதல்படிதான் நாங்கள் செயல்பட முடியும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications