170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுக நேரடியாக 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி குறியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாஜக, பாமக, அமமுக மற்றும் இதர கட்சிகளை 64 தொகுதிகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதிமுக தீவிரமாக இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் சூழலில், திமுக தரப்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த டெல்லி பயணத்தின் இறுதியில் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனிடையே தொகுதி பங்கீட்டில் எடப்பாடி பழனிசாமி கறார் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நேரடியாக அமித்ஷாவுடன் பேச எடப்பாடி பழனிசாமி பயணித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி போட்டுள்ள கணக்கின்படி அதிமுக நேரடியாக 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதனால் பாமக, பாஜக, அமமுக, தமாகா உள்ளிட்ட இதர கட்சிகளை 64 தொகுதிகளுக்குள் அடக்க வேண்டும் என்பதே அதிமுகவின் முடிவாக இருக்கிறது. அதற்கேற்ப தொகுதி பங்கீட்டை முடிக்க எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். ஆனால் பாஜக தனியாக 30 தொகுதிகளும், அமமுக மற்றும் இதர கட்சிகளுக்கு 20 தொகுதிகளையும் கோரி வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் பாமக அன்புமணி தரப்பு 17 தொகுதிகள் கேட்டு வருகிறது. அதேபோல் அதிமுகவுக்கு இன்னொரு பிரச்சனையும் எழுந்துள்ளது. என்னவென்றால் அமமுக, தமாகா தவிர்த்து மற்ற கட்சிகளை தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க டெல்லி மேலிடம் முயற்சித்து வருகிறது. புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, புரட்சி பாரதம் கட்சி, தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக், ஜான் பாண்டியன் ஆகியோரிடம் பேசி வருகிறது.
ஆனால் சிறிய கட்சிகளை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். இப்படி செய்யும் பட்சத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும். ஆனால் வெற்றி வாய்ப்பு இருக்குமா என்பது சந்தேகம் தான் என்று பார்க்கப்படுகிறது. இதற்காகவே எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் அமித்ஷாவின் கணக்கு என்ன என்பது தான் இப்போது கேள்வி.. ஏனென்றால் பாஜகவின் வாக்கு சதவிகிதம் குறைவாக காட்டப்படுவதை அமித்ஷா விரும்ப போவதில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி மனதில் வைத்துள்ள கணக்கிற்கு அமித்ஷாவை இறங்கி வர வைப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications