நமக்கு நாமே ஸ்டைலில் எங்களுடன் எடப்பாடி? ஸ்டாலின் அரசியலை கையிலெடுக்கும் இபிஎஸ்.. அவர் தான் ஸ்கெட்ச்
சென்னை: அதிமுகவின் அவசர செயற்குழு முடிந்திருக்கும் நிலையில், 2026 தேர்தலை மனதில் வைத்து பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக 2016 தேர்தலுக்கு முன்பாக தற்போதைய தமிழக முதல்வர் மேற்கொண்ட 'நமக்கு நாமே’ பயணம் போல் தானும் பயணம் மேற்கொள்ள இருப்பதோடு, பிரசாந்த் கிஷோரைப் போல தேர்தல் வியூக நிபுணரை நியமிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் பரபரப்பு நிலவுகிறது.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சீனியர்கள் போர்க்கொடி என பல்வேறு யூகங்கள் கிளம்பிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிமுக அவசர செயற்குழு கூட்டம் அப்படி எல்லாம் இல்லை, அதிமுகவில் எடப்பாடி தான் செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

அதிமுகவின் பெரும் சீனியர்களான கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சீனியர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையின் தான் 2026 தேர்தலை சந்திக்க வேண்டுமென தீர்மானமே போட்டுள்ளார். அப்படிப் பார்க்கையில் சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் இனி கட்சிக்குள் வருவது சந்தேகமே..!
இது ஒருபுறம் இருக்க, அதிமுகவின் எதிர்காலமே எடப்பாடி தான் என உறுதியாகச் சொல்ல முடியாது. முன்னதாக அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பதவியை வகித்து தொடர்ந்து கட்சியை வழிநடத்தி வருகிறார். ஆனால் அவரது தலைமையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக கடும் தோல்வியை சந்தித்து வருகிறது.
இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமின்றி தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. மேலும், அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்ட நிலையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய இரு கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டன. தேமுதிக தொகுதிகளில் போட்டியிட்டது.
இவ்வாறு கூட்டணி அமைத்த அதிமுக கூட்டணி 40 இடங்களில் கடும் தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல், சில இடங்களில் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது அதிமுகவினரை அதிருப்தி அடையச் செய்தது. அதிமுக சொல்லி அடிக்க வேண்டிய இடங்களில் எல்லாம், தமிழக பாஜ களம் இறங்கியது. அதிமுகவின் அலட்சியப் போக்கை பாஜக சாதகமாக்கிக் கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால், தேர்தல் கணிப்புகளில் சொன்னபடியே தேர்தல் முடிவும், அதிமுகவுக்கு பாதகமாக மாறியுள்ளது.
இதன் காரணமாக அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை தங்களது அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தினர். இந்த நிலையில் மீண்டும் ஒரு தோல்வியை தவிர்க்கும் வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தல் தான் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை நிலைநிறுத்தும் என உறுதியாகச் சொல்லலாம். இதனால் அத்தேர்தலை மிகக் கவனமாகக் கையாள வேண்டுமென எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதனால் கூட்டணியை வலுப்படுத்துவது, புதிய கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வருவது, தொகுதி வாரியான சுற்றுப் பயணம் மேற்கொள்வது என பல திட்டங்களை மனதில் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அந்த வகையில் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2015 ஆம் ஆண்டு தற்போது முதலமைச்சராக இருக்கும் முக ஸ்டாலின் அப்போது நமக்கு நாமே விடியல் பயணத்தை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மேற்கொண்டார். திமுக மற்றும் ஸ்டாலினின் அரசியல் பயணத்தில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் ஒரு மைல் கல் என்றே கூறலாம். தொடர்ந்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களை சந்தித்த அந்த பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை தியாகராய நகர் பகுதியில் நிறைவடைந்தது.
சுமார் 140 நாட்கள் இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் மீனவர்கள், தொழில் துறை வல்லுநர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், நெசவாளர்கள் என பலரையும் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அது மட்டும் அல்லாமல் ஏர் பூட்டி விவசாயம் செய்வது, நாற்று நடுவது, டீக்கடைகளில் டீ குடிப்பது, இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, ஆட்டோ பயணம் என பயணம் மேற்கொண்டதோடு, கோட்டு சூட், பேண்ட் சர்ட் அணிந்து செல்பி எடுப்பது என பல்வேறு வகைகளான பிரச்சார யுக்தியை மேற்கொண்டார்.
நிச்சயம் அது ஸ்டாலினின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்றே கூறலாம். 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக கிட்டத்தட்ட படுதோல்வியை சந்தித்த நிலையில் 2016 தேர்தலில் கிட்டத்தட்ட 90 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதோடு எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதாவுக்கு முன்பாக முக ஸ்டாலின் அமர்ந்தார். அதே பாணியை தான் 2021 தேர்தலிலும் திமுக முன்னெடுத்தது. கிராம சபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திய முக ஸ்டாலின் 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தார்.
இந்நிலையில் இதே போன்ற ஒரு பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரையும் சந்தித்து மக்களோடு மக்களாக பழக வேண்டும் என்ற ரீதியில் இந்த பயணத்திட்டம் வடிவமைக்கப்பட இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 2021 தேர்தலில் திமுக பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூக நிபுணராக பயன்படுத்தியது. அவரது ஐபாக் நிறுவனம் வேட்பாளர்கள் தேர்வு தொடங்கி, கூட்டணி வியூகம் பிரச்சார வியூகம் என பல்வேறு வியூகங்களை வகுத்துக் கொடுத்தது.
நிச்சயம் 2021 தேர்தலில் திமுக பெற்ற வெற்றிக்கு பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகமும் ஒரு முக்கிய காரணம் என சொல்லலாம். எனவே 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் பிரச்சார வியூக நிபுணரை நியமிக்க அதிமுக முடிவு எடுத்துள்ளது. அதற்கு அவசர பொதுக்குழுவில் வாய்மொழி ஒப்புதல் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications