ஃபார்முலா எடப்பாடிக்கு தெரியும்.. நெக்ஸ்ட் ஸ்டெப்.. “மகனுக்கு பதவி?” - மாஜி அமைச்சர் சொன்ன விஷயம்!
சென்னை : இந்த வெற்றியை நிரந்தர வெற்றியாக மாற்றுவதற்குரிய சூத்திரம், வியூகம் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுகவை வழிநடத்திச் செல்லும் ஆற்றல் எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதாக வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுக வழக்கில் நேற்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார்.
தலைமை அலுவலகத்தில் நேற்று பதவி ஏற்றதும் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை வினியோகிக்கும் அறிக்கையில் கையெழுத்து போட்டு தனது பணியை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி.

வாழ்த்து மழையில் எடப்பாடி
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் ஓபிஎஸ் அணியினர் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார். இதைத்தொடர்ந்து பொதுச் செயலாளராக முதல் கையெழுத்து போட்டு அறிக்கையும் வெளியிட்டார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்த கட்டம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், "அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பின் மூன்றாவது அத்தியாயமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் முதலமைச்சராக நான்கு ஆண்டு காலம் பதவி வகித்தார். அதன் பிறகு நடைபெற்ற தேர்தல் மூலம் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுள்ள நிலையில் இனிமேல் அதிமுக அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.

அதிமுகவுக்கு தடையாக விளங்கிய ஓபிஎஸ்
காலத்தை உணர்ந்து தான் சூழ்நிலைகள் நகரும். சூழ்நிலையை அறிந்ததால் தான் தற்போது பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நூறாண்டு காலம் அதிமுகவையும் அதன் கொள்கைகளையும் கொண்டு செல்வதற்கு தான் ஜெயலலிதா ஆசைப்பட்டார். அதற்கு பொதுச் செயலாளர் என்ற பதவி தேவைப்படுகிறது. அதிமுகவின் வளர்ச்சிக்கு ஓபிஎஸ் தடையாகவே இருந்து வருகிறார். ஓபிஎஸ் எத்தகைய மேல்முறையீடு செய்தாலும் எடப்பாடியார் பக்கம் தான் தொண்டர்களும் நிர்வாகிகளும் இருக்கிறார்கள்.

வியூகம் எடப்பாடிக்கு தெரியும்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுகவை வழிநடத்திச் செல்வது யார் என்பது அறிந்து தான் தொண்டர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். ஆகவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆற்றல் இருக்கிறது, ஆதரவு இருக்கிறது. தனது மகனுக்கு சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு ஆசைப்படாமல் எப்போதும் சுயநலத்திற்காக செயல்படாதவர் எடப்பாடி பழனிசாமி. இந்த வெற்றியை நிரந்தர வெற்றியாக மாற்றுவதற்குரிய சூத்திரம், வியூகம் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications