களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. குறிப்பாக அதிமுக, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இதனால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியவை தொகுதி பங்கீடு பணிகளில் முழு வேகத்தில் செயல்பட்டு வருகின்றன. கூட்டணி பேச்சு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரமும் அதே வேகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தொடர்ச்சியாக சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதிமுக சார்பிலும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் இந்த பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை மயிலாப்பூரில் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். மயிலாப்பூர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி மக்களை சந்திக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து மார்ச் 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு ஆலந்தூரில் நடைபெறும் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். அதே நாளில் மாலை 6 மணிக்கு தாம்பரம் பகுதியில் நடைபெறும் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார்.
இதையடுத்து, மார்ச் 28ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து அதே நாளில் மாலை 6 மணிக்கு திருவொற்றியூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சென்னை நகரில் தொடங்கும் இந்த சுற்றுப்பயணம் பின்னர் தமிழகம் பிற மாவட்டங்களிலும் தொடரும் என கூறப்படுகிறது.
இந்த தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளன. அதில் பாஜக, பாமக, அமமுக,, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக மற்றும் பிற கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications