இலவு காத்த கிளி.. ஓபிஎஸ், செங்கோட்டையனால் அதிமுக அதிர்ச்சி! எடப்பாடி பழனிசாமியின் பெரிய தவறு இதுதானா
சென்னை: "கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தது மிகப்பெரிய தவறாகிவிட்டது. அதாவது விஜய் வருகைக்காக மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தது போலாகிவிட்டது. இது அதிமுகவில் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில், சி.டி. நிர்மல் குமார், தங்களது கட்சியின் நிலைப்பாட்டை நேற்றைய தினம் தெளிப்படுத்திவிட்டார். இது அதிமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்று தராசு ஷ்யாம் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
News Focus Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று கேட்டு கெடு வைத்தார் செங்கோட்டையன். அதற்கு பதிலாக அவரது பதவியை பறித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

கட்சி விரோத நடவடிக்கை
இப்போதைக்கு அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார் செங்கோட்டையன். எம்எல்ஏ பதவியை அவரிடமிருந்து பறிக்க முடியாவிட்டாலும், அடிப்படை உறுப்பினர் பதவியை எடப்பாடியால் பறித்துவிட முடியும். ஓபிஎஸ்ஸையே கட்சியிலிருந்து தூக்கிய எடப்பாடிக்கு, செங்கோட்டையனை கட்சியிலிருந்து தூக்குவதில் என்ன கஷ்டம் இருக்க போகிறது?
கட்சியின் விரோத நடவடிக்கை என்று காரணத்தையும் ஈசியாக சொல்லி விடுவார். ஏனென்றால் ஓபிஎஸ் வழக்காடி..
அதிமுகவின் உரிமை சார்ந்த பல்வேறு வழக்குகளில் ஓபிஎஸ்தான் மனுதாரர்.. அப்படியிருக்கும்போது ஒரே காரில் இன்று செல்வது குறித்து நிச்சயம் கேள்வி எழும்.. அப்படி எழாவிட்டாலும் உதயகுமார் தூண்டிவிடுவார். காரணம், எடப்பாடி பழனிசாமிக்கு தான் நெருக்கமானவர் என்பதை காட்டிக் கொள்கிறார், மேலும், முக்குலத்தோர் பிரதிநிதியாக தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
2 நாட்களுக்கு முன்பு, குருபூஜைக்கு வருகிற எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ரத்தக் கையெழுத்து வேட்டை நடத்துவோம் என்றார். எத்தனையோ வருடமாக தேவர் பூஜை விழா நடந்து வருகிறது.. அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த விழாவில் ஏன் ரத்தக் கையெழுத்து வேட்டை நடத்த வேண்டும்?
எம்ஜிஆர், அண்ணா
அன்று பசும்பொன் தேவர் ஐயாவின் இறுதி ஊர்வலம் நடந்தபோது, அந்த அலங்கார வாகனத்துக்கு பின்னாடி இருந்த வாகனத்தில் இருந்தது 2 பெரிய தலைவர்கள் மட்டுமே.. ஒருவர் அண்ணா, மற்றொருவர் எம்ஜிஆர்..
இறுதி ஊர்வலத்தில் அண்ணா, , எம்ஜிஆர் சேர்ந்து வந்தது அச்சமூக மக்களை மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.. இந்த நிகழ்வுக்கு பிறகுதான், முக்குலத்தோர் ஆதரவு அதிமுகவுக்கு பெரும்பாலும் கிடைத்தது..
பசும்பொன் தேவர்
இந்நிலையில், சீர் மரபினர் என்பதை, 'சீர் மரபினர் பழங்குடியினர்' என, பெயர் மாற்றுவதற்கான கோரிக்கை அகில இந்திய அளவில் உள்ளது..
அதேபோல பசும்பொன் ஐயாவுக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணிய சாமி ஏற்கனவே கோரிக்கையும் வைத்திருக்கிறார். இதையெல்லாம் சேர்த்துதான் அதிமுக கணக்கில் கொண்டு, இழந்த வாக்குகளை மீட்டெடுக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால், கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தது மிகப்பெரிய தவறாகிவிட்டது. அதாவது விஜய் வருகைக்காக மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தது போலாகிவிட்டது. இது அதிமுகவில் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை.
நிர்மல்குமார் அதிரடி
இவ்வளவு பெரிய கட்சி, அதிலும் இத்தனை முறை ஆண்ட ஆட்சியை, விஜய் வந்துதான் காப்பாற்ற வேண்டுமா? என்று மாற்று கருத்தை முன்வைத்தார்கள். ஆனால், நேற்றைய தினம் சி.டி. நிர்மல் குமார், "ஒரு மாதத்திற்கு முன்னால் என்ன நிலைப்பாடோ நான் அன்னைக்கே சொல்லிவிட்டோம் அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெளிவுபடுத்திவிட்டார்.
இது ஏமாற்றமாகவும், கோபமாகவும் அதிமுகவுக்கு மாறியிருக்கிறது. குறிப்பாக முக்குலத்தோர் மக்களுக்கும் அந்த கோபம் அதிகமாகவே உள்ளது.
எடப்பாடி பழனிசாமி பலவீனம்?
இந்த சூழ்நிலையில்தான், செங்கோட்டையன், ஓபிஎஸ் ஒரே வாகனத்தில் சென்றிருக்கிறார்கள்.. பாண்டியன் ஓட்டலில் செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸை சந்தித்துள்ளதாகவும் தெரிகிறது. இதற்கு பிறகே மூவரும் சேர்ந்து குருபூஜை செய்துள்ளார்கள்.. இதன்மூலம் அதிமுகவில் ஒருங்கிணைப்பு இன்னும் தேவை என்பதையே இதன்மூலம் உணர்த்தியிருக்கிறார்கள்..
இதனால் செங்கோட்டையனை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எடப்பாடி நீக்கலாம்.. அவ்வாறு நீக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி பலவீனமானவர் என்றாகிவிடும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications