ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி!
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடும் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் பாமகக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாக அதிமுக மற்றும் பாஜக இடையே நடைபெற்று வரும் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாதது குறிப்பிடப்படுகிறது. இந்த இரு கட்சிகளுக்கிடையே தொகுதி ஒதுக்கீடு முடிவாகாததால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் தீர்மானிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதிக்குள் நடைபெறலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவியுள்ளது. இதை முன்னிட்டு சென்னை அமைந்தகரையில் பாஜக சார்பில் வெளிமாநில பார்வையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக பாஜக கூட்டணி
அந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிகள் ஏப்ரல் 15ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்பதால் அதற்குள் அனைத்து தேர்தல் பணிகளையும் முடிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதிக்குள் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வராததால் பாமகவுக்கு வழங்கப்படும் தொகுதிகள் குறித்த முடிவும் தாமதமாகி வருகிறது. அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, பாமக தரப்பில் இருந்து அவர்கள் போட்டியிட விரும்பும் 30 தொகுதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் பாமக வலுவாக உள்ள பகுதிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாமக தொகுதி கோரிக்கை
மேலும் குறிப்பாக சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தலா இரண்டு தொகுதிகளை பாமகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மாவட்டங்கள் பாமக ஆதரவாளர்கள் அதிகமாக உள்ள பகுதிகள் என்பதால் அந்த கோரிக்கையை அவர்கள் முன்வைத்ததாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொகுதி பங்கீடு
அதே நேரத்தில், தற்போது பாமக உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள சில தொகுதிகளை அதிமுக கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மயிலம் மற்றும் மேட்டூர் போன்ற தொகுதிகளை அதிமுக தனது கட்டுப்பாட்டில் பெற விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
இந்த அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2ஆம் தேதி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் தமிழகத்தில் உருவாகியுள்ள தேர்தல் அரசியல் நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமித்ஷா
மேலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான விவரங்களையும் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. அதோடு தமிழக பாஜக நிர்வாகிகள் வழங்கிய தொகுதி பட்டியலில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமெனவும் அவர் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த தேர்தலில் செய்யப்பட்ட தொகுதி பங்கீடு விவரங்களையும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள தொகுதி பங்கீடு விவரங்களையும் அமித்ஷா ஒப்பிட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.
அதிமுக - பாஜக
அதன் அடிப்படையில் பாஜகவிற்கு வழங்கப்படும் தொகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கேட்டுள்ள தொகுதிகளையும் ஆய்வு செய்து அதில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட பின்னரே பாமகவிற்கு வழங்கப்படும் தொகுதிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணிக் கட்சிகள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன.












Click it and Unblock the Notifications