ஸ்டாலின் அரசு தவற விட்டதை சட்டுன்னு பிடித்த எடப்பாடி பழனிச்சாமி.. வைத்தார் கோரிக்கை!
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
அரசு விட்ட ஒரு விஷயத்தை பிடித்துக்கொண்டு நெருக்கடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
பொங்கல் திருநாளுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இதன்படி, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

தமிழக அரசு உத்தரவு
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவை இந்த 20 பொருட்களாகும். ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் இது வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

கரும்பு வழங்க முடிவு
பொங்கல் தொகுப்பில் முக்கியமாக தரப்படுவது கரும்பு. ஆனால் இந்த முறை வெளியான அறிவிப்பில் கரும்பு குறிப்பிடப்படவில்லை. இது, பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கரும்பை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. இந்த நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து கரும்பும் தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

கரும்பு விடுபட்டது
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது: பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும், முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம்,கரும்பை காணவில்லை. தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு, தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை.

விடியா திமுக அரசு
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ரொக்கப் பரிசு கிடுக்கிப்பிடி
கடந்த வருடம் பொங்கலுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு ரூ.2500 ரொக்கப் பரிசு வழங்கியது. அது இம்முறை வழங்கப்படவில்லை. கொரோனா ஊரடங்கு காலம் என்பதால், கடந்த முறை அரசு, அரிசி அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் வழங்கியிருந்தது. எனவே இந்த முறையும் பணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ஆனால் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின், கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக 2 கோடியே 7 லட்சம் ரேசன் கார்டு அட்டைதாரர்களுக்கு, 4 ஆயிரம் ரூபாயை இரு தவணைகளில் வழங்கினார். ஏற்கனவே நிதி பற்றாக்குறை உள்ள நிலையில், மீண்டும் எப்படி ரொக்கப் பணம் வழங்க முடியும் என்ற எண்ணம் அரசிடம் உள்ளது. மேலும் இப்போது ஊரடங்கும் தளர்த்தப்பட்டு பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி இந்த முக்கியமான கோரிக்கையை முன் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications