திமுகவினரின் கிளினிக்கிற்கு போயிடாதீங்க.. உடம்பில் கிட்னி காணாமல் போய்விடும்.. கலாய்த்த எடப்பாடி
திருப்பத்தூர்: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு திமுக அரசு. இப்போது உடலில் இருக்கும் உறுப்பையும் திருட ஆரம்பித்துவிட்டனர். யாரும் திமுகவினர் கிளினிக் போகாதீர்கள், உடம்பில் கிட்னி காணாமல் போய்விடும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணத்தில் பேசியுள்ளார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

திமுக பொய் நாடகம்
அப்போது அவர், ''திருப்பத்தூர் நகரமே குலுங்குகின்ற அளவுக்கு மக்கள் வெள்ளம் கூடியிருக்கிறது. அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதி வெற்றியை இந்தக் கூட்டம் பறைசாற்றுகிறது. இன்றைய தினம் முதல்வர் தினமும் புதிய திட்டம் அறிவித்து, அதை சாதித்தது போன்று பொய்யான தோற்றம் உருவாக்குகிறார். இவர் தொடங்கும் திட்டமெல்லாம் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்திய திட்டங்கள். அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயரைச் சூட்டி பொய்யான நாடகத்தை அரங்கேற்றுகிறார்.
இந்த ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டமாவது திருப்பத்தூருக்குக் கொண்டு வந்தார்களா? அதிமுக ஆட்சியில் வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர் மாவட்டத்தை அதிமுக அரசு உருவாக்கியது. இது உங்களின் நீண்டநாள் கோரிக்கை. இதற்கு நாங்கள் 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம். புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கண்காணிப்பாளர் அலுவலகத்தை திமுக ஆட்சியில் திறந்துவைத்தனர்.
மின் கட்டண உயர்வு
மின் கட்டண உயர்வுக்கு உதய் மின் திட்டத்தில் நாங்கள் கையெழுத்துப் போட்டதுதான் காரணம் என்கிறார் அமைச்சர் டிஆர்பி ராஜா. உதய் மின் திட்டத்திற்கு இரண்டு நிபந்தனை விதித்தோம். 3 மாதத்துக்கு ஒரு முறை மின்கட்டணம் உயர்த்தும் நிபந்தனையை ரத்துசெய்யச் சொன்னோம், விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொறுத்தும் நிபந்தனையையும் ரத்து செய்யச் சொன்னோம். அதனை ஏற்று ரத்து செய்த பிறகே 2017 இல் கையெழுத்திட்டோம், 2021 வரை, அதாவது எங்கள் ஆட்சி முடியும் வரை மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உயர்த்திவிட்டு எங்கள் மீது பழி சுமத்துவது நியாயமா? மக்களை மடைமாற்றம் செய்ய முயற்சிக்கிறது திமுக. திமுக ஆட்சியில் எல்லா இடங்களிலும் ஊழல். ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அங்கு முறைகேடுகள் நடைபெற்றதை அவர்களே ஒப்புக்கொண்டு அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திமுக மண்டலக்குழு தலைவர் 5 பேர், நிலைக்குழு உறுப்பினர் 2 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
மதுரை மேயர் கைது
மதுரை மேயரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில், திமுக ஊழல் செய்ததாக, திமுக அரசே கைதுசெய்துள்ளது. நாம் சொன்னது உண்மைதானே?. அதிமுக ஆட்சி அமைந்ததும் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னதால் பயந்துபோய், ஸ்டாலின் ஆட்சியில் அவருடைய கட்சியினரையே கைது செய்யும் அவலம் தமிழகத்தில் நடந்துள்ளது.
திருநெல்வேலி மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் பங்கு பிரிப்பதில் பிரச்சனை உண்டானது. எனவே, திமுக மேயர் மீது திமுக கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார்கள். அதேபோல காஞ்சிபுரத்தில் திமுக மேயர் மீது திமுக கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருகிறார்கள். எல்லாமே, பங்கு பிரிப்பதில் தகராறு.
சென்னை மாநகராட்சியில் எப்படியெல்லாம் மக்கள் வரிப்பணத்தை மாநகராட்சி பொறுப்பாளர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் என்று பாருங்கள். டாய்லெட் சுத்தம் செய்வதற்கு ஒரு நாளைக்கு 800 ரூபாய். டாய்லெட் கழுவுவதிலும் கூட ஊழல் செய்த அரசு திமுக அரசு. இது 1000 கோடி ரூபாய் ஊழல். இது டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதியிருக்கிறார்கள். இதை நாம் சொன்னால் பொய் என்று சொல்வார். அதிமுக ஆட்சிக்கு வந்தபின்னர் இதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிட்னி திருட்டு
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் போராடுகிறார்கள். அதிமுக ஆட்சியில் இதேபோல் அவர்கள் போராடியபோது, எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்களோடு உக்கார்ந்து டீ குடித்து, 'திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என்றார். இன்றும் அவர்கள் போராடுகிறார்கள். அதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு திமுக அரசு.
இப்போது உடலில் இருக்கும் உறுப்பையும் திமுகவினர் திருட ஆரம்பித்துவிட்டனர். யாரும் திமுகவினர் கிளினிக் போகாதீர்கள், உடம்பில் கிட்னி காணாமல் போய்விடும். ஒரு திமுக எம்.எல்.ஏ.வின் நிறுவனம் மக்களிடம் மாட்டிக்கொண்டது. திருச்சி சித்தார் மருத்துவமனை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக திமுக அரசே அதிகாரிகளை நியமித்து, ஆய்வு செய்தது. முறைகேடு நடந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. அது திமுக எம்.எல்.ஏ. மருத்துவமனை என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. உடல் உறுப்பைத் திருடும் கும்பலின் ஆட்சி தொடர வேண்டுமா?.
ஏழ்மையைப் பயன்படுத்தி கிட்னியை திருடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, கண்டனத்துக்குரியது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதை மட்டும் ரத்து செய்திருக்கிறார்கள். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட எவரையும் கைதுசெய்யவில்லை. காரணம் திமுக எம்.எல்.ஏ.வோட மருத்துவமனை. அந்த எம்.எல்.ஏ பேட்டி கொடுக்கிறார். அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க ஊர் மக்களின் கிட்னியை கழற்ற வேண்டுமாம். ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன பரிசு கொடுக்கிறார் பாருங்கள். இப்படிப்பட்ட கட்சி நாட்டுக்குத் தேவையா? எங்க கார் 12 கோடி ரூபாய், கிட்னி திருடுனாத்தான் 12 கோடி கிடைக்கும்னு அவரே கூறுகிறார். இப்படிப்பட்ட மக்கள் விரோத ஆட்சி தொடர வேண்டுமா?.
சட்ட ஒழுங்கு சீர்கேடு
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. நீங்கள் தான் நீதிபதிகள், ஆட்சியைக் கொண்டுவரும் சக்தி உங்களிடம் இருக்கிறது. திருப்பத்தூரில் இன்று திருடும்போது தட்டிக் கேட்டவரை கத்தியால் குத்தியிருக்கிறார். எங்கயாவது பாதுகாப்பு இருக்குதா?. இன்று காலை நடந்த ஆலோசனை கூட்டத்தில் மெடிக்கல் ஷாப் நடத்துபவர், 'இரவில் மெடிக்கல் கடை திறந்துவைப்பதற்கு பயமாக இருக்கிறது' என்கிறார். தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களுமே அச்சத்தில் உள்ளனர்.
சேலம் ஆத்தூரில் ஆசிட் ஊற்றி நகை திருடியவரை மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். குற்றம் செய்பவர்களுக்கு காவல்துறை மீது அச்சமில்லை, காவல்துறை செயல் இழந்திருக்கிறது. காவல்துறைக்கே பாதுகாப்பில்லை. திருப்பூரில் எஸ்.ஐ. கழுத்தறுத்து கொலை செய்கிறார்கள். 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இனிமேல் நம்மை நாம்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
முடக்கப்பட்ட திட்டங்கள்
இது வேளாண் மக்கள் நிறைந்த பகுதி, விவசாயிகளுக்கு நிறைய திட்டம் கொடுத்தோம். குடிமராமத்துத் திட்டம், தடுப்பணைகள், மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம், தாலிக்குத் தங்கம் திட்டம், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திருமண உதவி திட்டம் தொடரும். பயிர்க்கடன் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம், பசுமை வீடுகள், உழவர் பாதுகாப்பு திட்டம், முதியோர் உதவித்தொகை கொடுத்தோம். இவ்வளவு திட்டத்தை முடக்கினர், முடக்கப்பட்ட திட்டம் அனைத்தும் அதிமுக ஆட்சியில் தொடரும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தோம் அதையும் நிறுத்திவிட்டனர். அத்திட்டமும் அதிமுக ஆட்சியில் தொடரும். அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக 7.5% உள் இடஒதுக்கீடு கொடுத்து 2818 பேர் இலவசமாக மருத்துவர் ஆகியுள்ளனர். அடுத்தாண்டு தேர்தலில் அதிமுகவை ஆதரிக்க வேண்டும். அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திலும் கூட்டணி வேட்பாளருக்கு அவர்களின் சின்னத்துக்கு வாக்களியுங்கள், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு. பைபை ஸ்டாலின் " என்றார் உற்சாகத்துடன்.












Click it and Unblock the Notifications