டாட்டா காட்டிட்டு போயிட்டாரு.. 2 நிமிடம் கூட எங்களிடம் பேசவில்லை.. எடப்பாடியால் நொந்துபோன அதிமுக!
கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திக்காமல் டாட்டா காட்டிவிட்டு சென்றது அப்பகுதி நிர்வாகிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வாரமாக கண் விழித்து அரங்கம் அமைத்ததாக கூறிய அதிமுகவினர், 10 நிமிடம் கூட எங்களுக்காக நின்று பேசாமல் சென்றது கஷ்டமாக இருப்பதாக ஆதரங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் 3 சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி, கோவை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து இன்று கடலூரில் மக்களை சந்தித்தார்.

இந்த பயணத்திற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்தில் வலம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு அந்தந்தப் பகுதி அதிமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பை அளித்து வருகின்றனர். அந்த வகையில் பண்ருட்டி பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு கிரேன் மூலமாக பலாப்பழ மாலை அணிவித்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். நெல்லிக்குப்பம் பகுதியில் பேனர், போஸ்டர், கொடி என்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் நெல்லிக்குப்பம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, கைகளை ஆட்டி டாட்டா காட்டி சென்றது அக்கட்சி நிர்வாகிகளிடையே ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் பகுதி அதிமுகவினர் பேசுகையில், ஒரு வாரமாக கண் விழித்து கஷ்டப்பட்டு அரங்கம் எல்லாம் அமைத்திருக்கிறோம். இறங்கி 10 நிமிடங்களாவது பேசியிருக்க வேண்டும்.
காலையில் இருந்து எடப்பாடி பழனிசாமி வருவார், எங்களுடன் பேசுவார் என்று நின்றிருக்கிறோம். வெயில் பார்க்காமல் உழைத்து மக்களை திரட்டி வேலையை விட்டு குழந்தைகளுடன் நிற்கிறோம். ஆனால் 2 நிமிடங்கள் கூட நிற்காமல் போகிறார்கள்.. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.. இதுவே ஜெயலலிதாவாக இருந்திருந்தால், நிச்சயம் நின்றிருப்பார்கள். என்னுடைய மனநிலையில் தான் இங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். வேண்டி விரும்பி அதிமுகவில் இருக்கிறோம்.
ஆனால் அசிங்கப்படுத்திவிட்டு சென்றுவிட்டார். வேலையை விட்டு ஓடியாந்திருக்கிறோம். ஆனால் சில நிமிடங்கள் கூட பேசவில்லை. விவரம் தெரிந்ததில் இருந்து இரட்டை இலைக்கு தான் வாக்கு அளித்து வருகிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி எங்களுக்காக நின்று பேசவில்லை. 2 மணி நேரத்திற்கும் மேலாக நின்றிருக்கிறோம். எங்களின் தலைவர் வருகிறார் என்று ஆவலாக இருந்தோம். ஆனால் கண்டுகொள்ளவே இல்லை.. நெல்லிக்குப்பம் மக்களுக்கு வணக்கம் கூட சொல்லவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications