“சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு?”.. எடப்பாடி அட்டாக்!
சென்னை: படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது.17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ். சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தவர் மின்சார ரயிலில் திருத்தணி நோக்கி சென்றுள்ளார். அப்போது 17 வயதிற்குட்பட்ட 4 சிறார்கள் சுராஜை கத்தியை காட்டி மிரட்டுவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதை சுராஜ் தடுத்த நிலையில் சிறார்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பித்த சுராஜ் திருத்தணி ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து சென்றார். மீண்டும் அவரை விடாமல் துரத்திய சிறார்கள் மறைவான இடத்திற்கு சுராஜை அழைத்து சென்று அரிவாளால் தாக்கியுள்ளனர். இதை 4 பேரில் ஒரு சிறுவன் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த இடத்தில் இருந்து 4 பேரும் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது.
படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு ஸ்டாலின் தலைமையிலன திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது. அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த பொம்மை முதல்வர் தானே? மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன் ஸ்டாலின் அவர்களே?
கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த அளவுக்கு ஒரு சம்பவம் நடக்க மூலக் காரணமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications