அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி!
சென்னை: அதிமுகவின் ஐடி விங் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கொந்தளித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யனை ஒரு பிடி பிடித்த எடப்பாடி பழனிசாமி, ஐடி விங்கில் உள்ள அத்தனை பேரும் யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராமில் வீடியோ போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் அறிக்கைகள் வெளியிட தன்னுடைய ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.
சமூக வலைதள அரசியல் மற்றும் தேர்தல் கள உத்திகள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த அதிருப்தியுடனும் ஆவேசத்துடனும் பேசியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் அரசியலில் புதிய கட்சிகள் காட்டி வரும் வேகத்திற்கு இணையாக அதிமுக ஐடி விங் செயல்படவில்லை என்ற அதிருப்தி எடப்பாடி பழனிசாமியிடம் நீண்ட நாட்களாகவே இருந்து வந்துள்ளது. ஐடி விங்கில் பொறுப்பில் இருக்கும் அத்தனை பேரும் சும்மா இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தனித்தனியாக யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என்று தற்போது அறிவுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு அதிமுகவின் சாதனைகளையும், அரசின் தோல்விகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். கட்சியின் டிஜிட்டல் ரீச் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யனிடம் எடப்பாடி பழனிசாமி தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஐடி விங் ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சமூக வலைதளங்களில் அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் ரியாக்ட் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார். தவெகவின் தவறுகளையோ அல்லது அரசியல் சூழல்களையோ விமர்சித்து அறிக்கை மற்றும் பதிவுகளை வெளியிடுவதற்கு, என்னுடைய ஒப்புதலுக்காக காத்திருக்க தேவையில்லை.
கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு உடனுக்குடன் பதிலடி கொடுங்கள் என அதிமுக நிர்வாகிகளுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். பொதுச்செயலாளரே நேரடியாக இறங்கி வேகம் காட்டியுள்ளதோடு, ஒப்புதலுக்குக் காத்திருக்க வேண்டாம் எனக் கூறியிருப்பது ஐடி விங் தொண்டர்களுக்குப் புதிய உத்வேகத்தைத் தந்துள்ளது.
தமிழக அரசியலில் சோசியல் மீடியாவில் ஐடி விங்கை முதல்முறையாக உருவாக்கியது அதிமுக தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுகவை திமுக மற்றும் தவெக ஓவர்டேக் செய்துவிட்டது. தற்போது விட்டதை பிடிக்க அதிமுக தீவிரமாக உள்ளது. அதன் காரணமாகவே கடந்த 3 நாட்களாக தவெகவின் சொதப்பல்களை அதிமுக ஐடி விங் விளாசி வருகிறது.












Click it and Unblock the Notifications