திமுக கெஞ்சுதா? கால்ல விழுந்தீங்களே அதுக்கு என்ன அர்த்தம்? எடப்பாடி பழனிசாமிக்கு ப.சிதம்பரம் கேள்வி
சென்னை: சமீபத்தில் டெல்லியில் வைத்து ராகுல் காந்தியை, திமுக எம்பி கனிமொழி சந்தித்திருந்தார். இந்த சந்திப்பை, கூட்டணிக்காக காங்கிரஸிடம் திமுக கெஞ்சுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு ப.சிதம்பரம் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார்.
விஜய்க்கு சப்போர்ட் செய்வதும், திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்துவதும் என காங்கிரஸில் எம்பிக்கள் சிலர் பஞ்சாயத்தை கிளப்பியிருந்தனர். இப்படி இருக்கையில் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் கவனம் பெற்றிருந்தது.

எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக-காங்கிரஸ் குறித்து பேசியதாவது, "கூட்டணியில் பிளவு வந்துவிட்டது. தினந்தோறும் ஊடகங்களில் சொல்கிறார்கள். நேற்று கூட கனிமொழி டெல்லிக்கு சென்று ராகுல் காந்தியை சந்தித்திருக்கிறார். எதற்காக இந்த சந்திப்பு? எடப்பாடி பழனிசாமியை டெல்லி அடிமை என்றார்கள். யார் அடிமை? திமுக தான் அடிமை. அங்கே போய் கூட்டணிக்கு கெஞ்சி கொண்டிருக்கிறார்கள். குழப்பம் வந்துவிட்டது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? இருக்காதா? என தடுமாற்றம் இருக்கிறது. காங்கிரஸ் நிர்வாகிகளும் திமுக நிர்வாகிகளும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்று பேசியிருந்தார்.
ப.சிதம்பரத்தின் பதிலடி
இந்த விமர்சனத்திற்கு ப.சிதம்பரம் பதிலடி கொடுத்திருக்கிறார். "நேரடியாக இரண்டு கட்சி தலைவர்கள், சந்தித்து பேசுவது கெஞ்சுவது என்றால்.. கால்ல விழுவதுக்கு என்ன பெயர் சொல்றது? இதெல்லாம் தேவையில்லாத விஷயங்கள். தொகுதி பங்கீடு குறித்து இரு தலைவர்களும் பேசி முடிவெடுப்பார்கள். எஸ்.ஏ. சந்திரசேகர், காங்கிரஸ் விஜயோட கூட்டணி சேர்ந்தா நல்லா இருக்கும் என சொல்கிறார் எனில், அது அவருடைய ஆசை. அதை வெளிப்படுத்துகிறார். அதுல என்ன தப்பு?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications