பீகார் தேர்தல் வெற்றி.. அதிமுகவுடன் பேரத்தை அதிகரிக்கும் பாஜக.. அமித்ஷா போட்ட சைலண்ட் உத்தரவு!
சென்னை: பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி அபார வெற்றியை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக பாஜகவின் கவனம் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு பக்கம் திரும்பி இருக்கிறது. தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களில் அடைந்து வரும் வெற்றியால், இந்த தேர்தலில் அதிமுகவிடம் கூடுதல் தொகுதிகளை பெற்று தீர வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இதில் பாஜக 89 தொகுதிகளையும், ஜேடியூ 85 தொகுதிகளையும், லோக் ஜனசக்தி கட்சி 19 தொகுதிகளையும் கைப்பற்றியது. என்டிஏ கூட்டணியின் இந்த வெற்றிக்கு பின் பல்வேறு கணக்குகள் சொல்லப்படுகிறது. குறிப்பாக தேர்தலுக்கு முன் மகளிருக்கு அளிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் மாற்றத்தை ஏற்படுத்தியதாக கருதுகின்றனர்.

அதேபோல் தேர்தலுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட SIR நடவடிக்கை, சிராக் பாஸ்வானை கூட்டணிக்குள் கொண்டு வந்தது, தேஜஸ்வி யாதவ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை, இந்தியா கூட்டணியில் ஓவைசியை ஏற்காதது என்று என்டிஏ கூட்டணியின் வெற்றிக்கு ஏராளமான காரணங்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பாஜக உடனடியாக அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது.
பாஜகவின் முக்கிய குறியாக மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் மாறி இருக்கின்றன. மேற்கு வங்கத்தில் ஏற்கனவே பாஜக எதிர்க்கட்சியாக இருக்கும் சூழலில், அடுத்த தேர்தலில் வென்று ஆளுங்கட்சியாக உருவாக வேண்டும் என்று கணக்கு போட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
இதனால் இம்முறை அதிமுகவிடம் கூடுதல் தொகுதிகளை பாஜக பெறலாம் என்று கருதப்படுகிறது. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்ற நிலையில், இம்முறை 40 முதல் 50 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொகுதி என்றும், தென் மாவட்டங்களில் கூடுதலாக சில தொகுதிகளையும் கணக்கிட்டு பாஜக பேரத்தை தொடங்கி உள்ளதாக பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வர அதிக வாய்ப்புகள் இருப்பதால், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் SIR நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், பாஜக அதனை பயன்படுத்தி கொள்ளும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதேபோல் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் பூத் கமிட்டியை கூடுதல் வலிமையாக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த தேர்தலில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications