30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி!
சென்னை: பாஜக உடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்யும் வகையில் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வரும் பயணம் கடைசி நேரத்தில் ரத்தான நிலையில், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்க உள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 34 நாட்களே இருக்கும் சூழலில், அதிமுக தொகுதி பங்கீடு இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. இதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவரின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட, நேரடியாக எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக டெல்லி பயணித்துள்ளார்.

அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு நிறைவடையாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் முதன்மையான காரணம் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் பாஜக அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறது. கோவை, சேலம், தர்மபுரி, திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறது.
அதுமட்டுமல்லாமல் பாஜக தரப்பில் முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கான பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் விருகம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோவை வடக்கு, சிங்காநல்லூர், மொடக்குறிச்சி, அந்தியூர், தாராபுரம் அவரக்குறிச்சி, திருப்பூர் தெற்கு, மதுரை தெற்கு, குன்னூர், வால்பாறை, சங்ககிரி, சிதம்பரம், பழனி, திருச்செங்கோடு, நெல்லை, ராதாபுரம், நாகர்கோவில், பத்மநாபபுரம் தொகுதிகளை கேட்கிறது.
இந்த தொகுதிகளில் ஏராளமானவை அதிமுகவின் கோட்டையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக் கட்சி, ஐஜேகே உள்ளிட்டவையும் தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க பாஜக காய்நகர்த்தி வருகிறது. இதனால் அவர்களும் கூடுதலாக தொகுதிகளை கேட்பது தெரிய வந்துள்ளது. இன்னொரு புறம் அமமுகவுக்காகவும் பாஜக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
இதனால் பாஜக கொடுக்கும் பட்டியலில் உள்ள தொகுதிகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக மறுப்பு தெரிவிப்பதால், பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று பின் வாங்கி இருக்கிறார். இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி மீண்டும் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமியுடன் 2 முறை தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும், அது இறுதி வடிவம் பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் பாஜக மொத்தமாக சுமார் 55 தொகுதிகள் வரை கேட்பதால், என்ன முடிவு எடுக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications