மாணவர்களே சூப்பர் சான்ஸ்.. கல்விக்கடன் பெற இன்று சிறப்பு முகாம்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதற்கான முகாம்கள் தமிழ்நாடு அரசு மற்றும் வங்கிகள் இணைந்து தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்விக்கடன் வழங்குவதற்கான முகாம்களை நடத்தி வருகின்றனர்.
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகம். தேசிய சராசரியை விட மிக அதிகமாக உள்ள உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சதவீதம் மேலும் அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலும் போது ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது. மிக குறைவான கட்டணத்தில் அரசு கல்லூரிகளில் மாணவர் பயின்று வருகின்றனர். கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இது தவிர பிற தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு பொருளாதாரம் தடையாக இருக்க கூடாது என்பதற்காக வங்கிகள் மூலம் கல்விக் கடன் பெற்றுத் தரவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது. காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் இன்று கல்விக் கடன் முகாம் நடைபெறுகிறது.
கல்விக்கடன் விண்ணப்பம் மற்றும் அதற்கு தேவையான வருமான சான்றிதழ், பான்கார்டு விண்ணப்பம் இ சேவை மையம் மூலம் இந்த முகாமில் பதிவு செய்யலாம். இந்த முகாமில் அனைத்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு கல்விக்கடன் முகாமில் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கல்வியும் சுகாதாரமும் நம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எல்லோரும் கல்வி கற்க பள்ளி - கல்லூரிகளை திறந்தார்கள். கட்டணமில்லா பஸ் பயணம் - உதவித்தொகை - முதல் தலைமுறை பட்டதாரிக்கு கட்டண விலக்கு என்ற கலைஞர் அவர்களின் வழியில், கல்வி வளர்ச்சிக்காக காலை சிற்றுண்டி திட்டம் - புதுமைப்பெண் திட்டம் - நான் முதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், பட்டப்படிப்புக்காக சேரவுள்ள மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கில் நம் திராவிட மாடல் அரசு தமிழ் நாடெங்கும் மாவட்ட ஆட்சியர்கள் வளாகத்தில் சிறப்பு 'கல்விக்கடன் முகாம்களை' நாளை நடத்துகிறது. இந்த முகாம்களில் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்று பயனடைய மாணவ - மாணவியர்களை வாழ்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
கல்விக் கடன் முகாம்களில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் மற்றும் தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு, சாதிச் சான்று, பெற்றோரின் ஆண்டு வருமான சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, கலந்தாய்வு கடிதம் / நுழைவுத் தேர்வு முடிவுகள், கல்லூரி ஒப்புதல் கடிதம்/ கல்லூரி சேர்க்கை கடிதம், கல்லூரி கட்டண விவரம், முதல் பட்டதாரி சான்று மற்றும் உறுதிமொழி சான்று, கடன்பெறும் வங்கியின் பெயர் மற்றும் பாஸ் புத்தகம் ஆகியவை கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications