கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்.. மேனேஜருக்கு 3 மாதம் சிறை.. நீதிமன்றம் அதிரடி!
சென்னை: நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்ததற்காக கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு (kotak mahindra bank) ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் அந்த வங்கியின் மேலாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளதோடு, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வங்கிக் கடனை திரும்ப செலுத்திய பின்னரும் அடமானமாக வைத்த பத்திரத்தை திரும்ப தர மறுத்த கரூர் வைஸ்யா வங்கியின் தலைமை மேலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தரப்பில் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் மக்களிடையே அதிகமாக விவாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை கோட்டாக் மஹிந்திரா வங்கி மேலாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்ததற்காக கோட்டாக் மஹிந்திரா வங்கிக்கும், அந்த வங்கியின் மேலாளருக்கும் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், கோட்டாக் மஹிந்திரா வங்கியில் ரூ.1.5 கோடி கடனாக பெற்றுள்ளார். இந்தக் கடனை வட்டியுடன் சேர்த்து முன்கூட்டியே ரூ.1.7 கோடியாக அடைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடனை அடைத்ததற்கான என்ஓசி சான்றிதழை வாங்க முயற்சித்துள்ளார். ஆனால் என்ஓசி சான்றிதழ் மற்றும் கடனை அடைத்ததற்கான மற்ற சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த செல்வராஜ், உடனடியாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது வங்கியின் சட்டப்பிரிவு மேலாளர் கார்த்திகேயன் என்பவர், பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் அதில் இருந்தது தவறான தகவல் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியதோடு, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இதன்பின் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டாக் மஹிந்திரா வங்கி மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரணை எழும்பூர் நீதிமன்றம், நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்ததற்காக கோட்டாக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்தது. அதேபோல் சட்டப்பிரிவு மேலாளர் கார்த்திகேயனுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications