நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனு.. தமிழக அரசுக்கு எழும்பூர் நீதிமன்றம் போட்ட உத்தரவு!
சென்னை: நடிகை கஸ்தூரி அண்மையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் அவரை விடுவிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், நிபந்தனையில் தளர்வு கோரி மனு தாக்கல் செய்துள்ளார் கஸ்தூரி. இந்த மனு மீது தமிழக அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது எழும்பூர் நீதிமன்றம்.
நடிகை கஸ்தூரி அண்மையில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்தும் தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியிருந்தார். இது குறித்து தெலுங்கு அமைப்பினர் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் கஸ்தூரி தலைமறைவானார். இதனை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை தேடிவந்தனர். கடந்த 17 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அதைத்தொடர்ந்து, 21 ஆம் தேதி புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் கஸ்தூரி. நிபந்தனையின் அடிப்படையில் தினமும் காலை 10 மணிக்கு எழும்பூர் காவல் நிலையத்திற்குச் சென்று நடிகை கஸ்தூரி கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் அந்த நிபந்தனைகளை தளர்த்தக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு இன்று மேஜிஸ்ட்ரேட் தயாளன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் டிசம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications