சென்னை அருகே மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மொத்தமாக தூக்கப்படும் டாஸ்மாக் ஊழியர்கள்
சென்னை: டாஸ்மாக்கில் போய் மது அருந்தும் குடிமகன்களுக்கு இன்று வரை தீராத பிரச்சனை என்றால், பாட்டிலுக்கு எம்ஆர்பியைவிட 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பது தான். இந்த பிரச்சனையை தடுக்க டாஸ்மாக் நிர்வாகமும் பல முயற்சிகளை செய்து வருகிறது.. ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லை.. பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இந்நிலையில் மது பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூல் செய்ததாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதுதவிர ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்கள், தனியார் மதுபான பார்கள் உள்ள. இதில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு, சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 மற்றும் ஆப் பாட்டிலுக்கு 20 ரூபாய், புல் பாட்டிலுக்கு 40 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவது தொடர்கிறது என்பது குடிமகன்களின் குற்றச்சாட்டு ஆகும்.

ஏதோ ஒரு சில கடைகளில் மட்டும் இல்லை என்றும், எல்லா கடைகளிலுமே பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை மதுப்பிரியர்கள் வைத்து வந்தனர். இதையடுத்து மதுப்பிரியர்களின் கோரிக்கையை ஏற்று மதுபான கடைகளில் டிஜிட்டல் முறையில் மது விற்பனையை மேற்கொள்ள டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
முதற்கட்டமாக ராணிப்பேட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு கடைகளில் ஏற்கனவே பரிசோதனை முறையில் டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை நடைமுறை அமலுக்கு வந்தது. அடுத்ததாக சென்னையின் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, டாஸ்மாக் கடை மதுபான கடை பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 131 மதுக்கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 மதுக்கடைகளிலும் கடந்த 16ம் தேதி முதல் டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை நடைமுறைக்கு வந்தது. இந்த நடைமுறை மூலம் மதுபான உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்தையும் கண்காணிக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
மதுபான உற்பத்தி ஆலைகளில் மது வகைகள் பாட்டிலில் அடைக்கப்பட்ட உடன், அதில் 'கியூ ஆர் கோடு' அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. அதில், பாட்டிலில் மது அடைக்கப்பட்ட நாள், நேரம் டிஜிட்டல் முறையில் ஏற்றப்படுகிறது. மதுப்பிரியர்கள் இந்த மது பாட்டில்களை வாங்கும்போது அவர்களுக்கு ரசீது வழங்கப்படுகிறது. இதனால், மதுபான பிரியர்கள் கூடுதல் பணம் கொடுக்க தேவையில்லை என்றும் பணத்தையும் ரொக்கமாகவோ, ஜி-பே அல்லது கார்டு மூலம் எளிதாக செலுத்தலாம் என்று டாஸ்மாக் அறிவித்தது.
இந்த நடைமுறையால் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் நம்பியது. டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்தபடியே டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் வாங்கும் மதுபானங்களை டிஜிட்டல் முறையில் ஸ்கேனிங் செய்து ரசீது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்கப்படுவதாக தடுக்கப்பட்டதா என்றால் இல்லை என்பதே மதுப்பிரியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு டாஸ்மாக் கடையில் டிஜிட்டல் முறையில் விற்பனை செய்யப்பட்ட மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக மது பிரியர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மார்க் அதிகாரிகள் விசாரணை நடத்தியதுடன், ஊத்துக்காடு டாஸ்மாக் கடையில் மதுபானங்களுக்கு விற்பனை விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்த டாஸ்மாக் கடையின் 2 மேற்பார்வையாளர்கள், 6 பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications