கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்.. தேர்தல் நடத்தை விதிமுறை சொல்வது இதுதான்! மக்களே கவனம்
சென்னை: தமிழகத்துக்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 23ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. பிறகு மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தான் பொதுமக்கள் கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார்.

அதன்படி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தி ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறை
இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி தமிழகத்திலும் சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் நடைமுறை முழுமையாக முடியும் வரை அமலில் இருக்கும். தேர்தலை முறைகேடு இன்றி அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக தான் இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகின்றனர். இந்த காலக்கட்டத்தில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் பறக்கும் படையாக செயல்படுவார்கள்.
ரூ.50 ஆயிரம் தான் 'லிமிட்'
தேர்தலில் முறைகேடு, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் சோதனையை மேற்கொள்வார்கள். இந்த நடத்தை விதிமுறை காலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக அதிகளவில் பணம் எடுத்து செல்லக்கூடாது. அதன்படி ரூ.50 ஆயிரம் வரை ஆவணங்கள் தேவையில்லை. மாறாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் கையில் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு விடும்.
ரூ.10 லட்சம் சிக்கினால்..
இதனால் பொதுமக்கள் கையில் அதிகளவில் பணம் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
வருமான வரித்துறையினர் விசாரணையை தொடங்குவார்கள். அதேபோல் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பரிசு பொருட்கள் எடுத்து செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
ரூ.10,000-க்கு மேலான பொருட்கள்
இல்லாவிட்டால் அந்த பொருட்கள் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதலாக வாய்ப்புள்ளது. அதன்படி ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசு பொருட்கள் உள்பட பிற பொருட்களை எடுத்து சென்றால் அது பறிமுதல் செய்யப்படும். இந்த பணம் - பொருட்கள் அரசியல் கட்சி, வேட்பாளர்களுடன் தொடர்பில்லாமல் இருக்கும் பட்சத்தில் உரிய ஆவணங்கள், உரிய விளக்கம் கொடுத்தால் மீண்டும் ஒப்படைக்கப்படும். இல்லாவிட்டால் கருவூலத்தில் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications