தமிழகத்தில் ஜூன் 19இல் மாநிலங்களவைத் தேர்தல்! பதவிக்காலம் முடிய போகும் அந்த 6 எம்பிக்கள் யார்?
சென்னை: 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் தமிழகத்தில் வரும் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைய போகிறது.

காலியாக உள்ள 6 எம்பி பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஜூன் 2ஆம் தேதி அறிவிப்பாணை வழங்கப்படும். ஜூன் 9ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஜூன் 10 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூன் 12 ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்பிக்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம். அப்துல்லா, மதிமுக வைகோ, பாமக அன்புமணி, அதிமுக சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அப்படிப்பார்த்தால், தற்போது 134 எம்எல்ஏக்களை வைத்துள்ள திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்எல்ஏக்கள் (ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேர் உள்பட) அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.
தமிழகத்தை போல் அஸ்ஸாமிலும் 2 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மிஷன் ரஞ்சன் தாஸ், பிரேந்திர பிரசாத் பைஷ்யா ஆகியோரின் பதவிக்காலமும் முடிவடைகிறது.
6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications