சிபிஐ தொடங்கி ED வரை.. எல்லாருக்கும் பறந்த லெட்டர்.. தமிழக தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்களைக் கண்காணிக்கும் பணிகளில் பறக்கும் படையினர் இறங்கியுள்ளனர். இதற்கிடையே இப்போது தேர்தல் ஆணையத்திடம் இருந்து மத்திய விசாரணை முகமைகளுக்கு முக்கிய கடிதம் ஒன்று பறந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்குத் தேர்தல் தொடர்பான அறிவிப்பைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே பொதுவாகத் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். பணத்தை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ரொக்கமாக எடுத்துச் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

நடத்தை விதிகள்
அதன்படி ரூ.50,000க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் சென்றால் அதற்கான ஆவணங்கள் தேவைப்படும். அப்படி ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும். அதேபோல பரிசுப் பொருட்கள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர், பல்வேறு சோதனைகளை நடத்தி வருகின்றனர். பறக்கும் படையினரின் அதிரடி சோதனைகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20 கோடிக்கும் அதிகமான கணக்கில் காட்டப்படாத பணம் பிடிபட்டிருக்கிறது.
அறிவுறுத்தல்கள்
இந்த நிலையில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான வருமானவரித் துறை, வருமானவரி புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, உளவுத்துறை, சுங்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு அவசரமாக ஒரு நோட்டீசை அனுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையம். அதில் விசாரணை அமைப்புகளுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதாவது கணக்கில் காட்டப்படாத பணம், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணம், போதைப்பொருள், மது, சட்டவிரோதமாக நடக்கும் இலவச பரிசுப் பொருட்கள், சலுகைகள் உள்ளிட்டவற்றின் நடமாட்டம் இருக்கிறதா எனக் கண்காணிக்கத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.. குறிப்பாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக சிக்கினால் உடனடியாக வருமான வரித்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுங்கள் என்றும் கூறியுள்ளனர்.
பறந்த லெட்டர்
நேர்மையான தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில், சட்டவிரோதமாக வாக்காளர்களுக்குத் தரப்படும் அனைத்தையும் கண்காணித்து, அதை தடுப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது . இதனை அடுத்து, விசாரணை அமைப்புகள் அனைத்தும் இந்த விவகாரத்தில் சீரியஸாக இயங்கத் தொடங்கியிருக்கின்றன என்கிறார்கள்.
அடுத்து என்ன
அதேநேரம் இத்தோடு இந்த நடவடிக்கை முடியவில்லை. முதற்கட்டமாக இப்போது விசாரணை அமைப்புகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அடுத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கும் இதுபோல சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்காணிக்குமாறு கடிதம் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
வழகுமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் சூழலில், இந்த முறை தனித்தனியாகவே தேர்தல் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 9ம் தேதி புதுச்சேரிக்குத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. தமிழகம் புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களிலும் சேர்ந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications