சூடுபிடிக்குதே.. சென்னை விரையும் டெல்லி குழு! 2024 தேர்தல் தொடர்பாக தமிழ்நாட்டில் அதிகாரிகள் ஆய்வு
சென்னை: 2024 மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக தமிழ்நாட்டில் 2 நாட்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள்.
கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், பாஜக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று மோடி அரசு ஆட்சியை தொடர்ந்து வருகிறது. இந்த அரசின் பதிவிக்காலம் ஜூன் 16 தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் இன்னும் ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் கட்சியான பாஜகவும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும், மற்ற கட்சிகளும் சில மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 வது முறையாக தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்குமா அல்லது 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் பணியை தொடங்கி இருக்கும் நிலையில் மறுபக்கம் தேர்தலை நடத்தக்கூடிய தேர்தல் ஆணையமும் முழு வீச்சில் இதற்கான பணிகளில் இறங்கி இருக்கிறது.
மார்ச் இறுதியில் தேர்தல் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகிறார்கள். துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் உள்ளிட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வருகிறார்கள். இவர்கள், தமிழ்நாடு தேர்தல் அதிகாரிகள் சத்யபிரதா சாகுவுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள்.
இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள், தேர்தல் பாதுகாப்பு பணிகள், இறுதி வாக்காளர் பட்டியல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை கண்காணிப்பார். நாட்டில் மொத்தம் இருக்கும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று, 272 என்ற பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெறும் கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.












Click it and Unblock the Notifications