தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட அய்யா.. பாமக அலுவலக முகவரி மோசடியா? கட்சி விதி 21 சொல்வதென்ன?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் மோதல் உச்சத்தை தொட்ட நிலையில் அன்புமணிதான் தலைவர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததற்கான கடிதத்தை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் பாமக கட்சி அலுவலகத்தின் முகவரியை மாற்றி மோசடி செய்துவிட்டதாக ஜி.கே.மணி குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே ராமதாஸ் ஒப்புதலுடன் தான் கட்சியின் அலுவலக முகவரி மாற்றப்பட்டது எனவும், மேலும் பாமக கட்சி விதி 21ன் படி கட்சி அலுவலகம் சென்னையில்தான் அமைந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகின்றனர் பாமகவினர்.
தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பாட்டாளி மக்கள் கட்சியில் இரு அணிகள் உருவாயின. அன்புமணியை கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாகவும் தானே தலைவராகத் தொடர்வதாகவும் அதிரடியாகக் கூறினார் ராமதாஸ்.
ஆனால் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர், எனக்குத்தான் பொதுக்குழுவைக் கூட்ட அதிகாரம் இருக்கிறது எனக் கூறிய அன்புமணி கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுக்குழுவை நடத்தினார். அதில் 2026 வரை தலைவராகத் தொடர்வதற்கும், கூட்டணி தொடர்பான முடிவெடுப்பதற்கும் அன்புமணிக்கு அதிகாரம் அளித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாமக மோதல்
தொடர்ந்து ராமதாஸ் தரப்பிலும் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இரு தீர்மானங்களும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதில்தான் ராமதாஸுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாட்டாளி மக்கள் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணி ராமதாஸுக்கே உரிமை உள்ளது எனவும், அவர்தான் தலைவர் அவருக்கே அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது எனக் கூறினார் பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் பாலு.
ஜி.கே.மணி குற்றச்சாட்டு
இந்த நிலையில் திட்டமிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் முகவரியை மாற்றிக் கொடுத்து மோசடி செய்துவிட்டதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பினார் முன்னாள் தலைவரான ஜிகே மணி. அதாவது பாட்டாளி மக்கள் கட்சியின் நிரந்தர முகவரி தேனாம்பேட்டையில் இருக்கும் நிலையில், தி-நகர் அட்ரஸைக் கொடுத்து தேர்தல் ஆணையத்தை மோசடி செய்துவிட்டதாக ஜிகே மணி புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த வழக்கறிஞர் பாலு, ஜிகே மணி சொல்வது பொய் எனவும், 2022 ஆம் ஆண்டு கட்சியின் தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்ட பிறகு அதாவது 2022 ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் தி-நகர் முகவரியைத்தான் கட்சியின் தலைமை அலுவலக முகவரியாகக் கொடுத்திருந்தோம் எனக் கூறினார்.
பாமக முகவரி
மேலும் அன்புமணி ராமதாஸ் அறிக்கையிலும் தி நகர் முகவரிதான் இருக்கும், ராமதாஸ் வழங்கும் உறுப்பினர் அடையாள அட்டையிலும் இந்த முகவரிதான் இருக்கும். இதை வைத்தே தேர்தல் பணிகளும் நடத்தப்பட்டன. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த முகவரிக்குத்தான் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியும் பெற்றும் வந்துள்ளது எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் ராமதாஸ் விதித்த கட்சி விதிகளே தற்போது அவருக்கு எதிராகத் திரும்பி உள்ளது கவனிக்கத்தக்கது.

பாமக சட்டம்
அதாவது கட்சியின் தலைமை அலுவலகத்தைத் தைலாபுரத்துக்கு மாற்றியதாக ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி அமைப்புச் சட்டம் 21ன் படி கட்சியின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும் கட்சியின் எல்லா அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்திருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அடிப்படையில் ராமதாஸ் தைலாபுரத்துக்கு கட்சியின் தலைமை அலுவலகத்தை மாற்றியதாகக் கூறுவது செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாகத் தான் வகுத்த விதிகளாலேயே தற்போது சிக்கலைச் சந்தித்திருக்கிறார் ராமதாஸ். நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்புக்கு ஆதரவாகத் தீர்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர் அன்புமணி தரப்பினர்.












Click it and Unblock the Notifications