எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் கிடையாது.. தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்.. புகழேந்தி அதிரடி!
சென்னை: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை இனி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஓபி ரவீந்திரநாத், கேசி பழனிச்சாமி, புகழேந்தி மற்றும் தேர்தல் ஆணையம்க் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு விதித்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை நிராகரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் விசாரணையை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பின் காரணமாக இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கவுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்புக்கு பின் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த முறை நீதிமன்றத்தை எடப்பாடி பழனிசாமியால் ஏமாற்ற முடியவில்லை. தேர்தல் ஆணையம் இனி விசாரணையை தொடங்கும். மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.
உட்கட்சி விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று இங்கு கூறியவர்கள், எதற்காக தேர்தல் ஆணையத்திற்கு சென்று பொதுச்செயலாளர் பொறுப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரினார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமியின் அடிப்படை கூற்றே தவறு. எங்களை நீக்குவதற்கு அவருக்கு அதிகாரம் கிடையாது. யாரைக் கேட்டாலும் கட்சியில் இல்லை என்று மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
இனி எந்த பிரச்சனையும் இல்லை. இரட்டை இலை யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் விசாரிக்கும். சிவில் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை, எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இனி ஊரையும், உலகத்தையும் ஏமாற்ற முடியாது. எடப்பாடி பழனிசாமி என்ற தீயசக்தியிடம் இரட்டை இலை இருக்கக் கூடாது.
அத்திகடவு - அவினாசி திட்டத்தின் பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை. அதற்கு எடப்பாடி பழனிசாமி செல்கிறார். இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினால், அது பொது நிகழ்ச்சி என்கிறார்கள். பழனிசாமி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே இலக்கு என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications