Election Exclusive: பாஜகவுக்கு பல்ப் கொடுக்கும் எடப்பாடி? பக்கா ஸ்ட்ராங்கா இருக்கோம்..பாஜக நீட்டிய லிஸ்டால் பதறிய அதிமுக
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கணக்குகள் தீவிரமடைய தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக அதிமுக பாஜக கூட்டணியில் திரை மறைவில் பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்துள்ளன. தமிழகத்தில் பாஜக பலமாக இருப்பதாக கூறி 60 தொகுதிகள் வரை கேட்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் 40 தொகுதிகள் வேண்டுமென பிடிவாதமாக இருக்கிறது பாஜக. ஆனால் கடந்த தேர்தலைப் போல குறைந்த தொகுதிகளையே ஒதுக்க முடியும் என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இடையிலான தொகுதி பங்கீடு குறித்து முக்கியமான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று சென்னையின் தி.நகர் பகுதியில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டம் இந்த விவகாரத்தில் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமை தாங்கினார்.

அதிமுக பாஜக கூட்டணி
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் தொகுதிகள் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மதிப்பீட்டின் அடிப்படையில், அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்டு பேச்சுவார்த்தை நடத்த பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பேச்சுவார்த்தையில் குறைந்தது 40 தொகுதிகளையாவது பெற வேண்டும் என்பது பாஜக தலைமையின் முக்கிய இலக்காக உள்ளது என கூறப்படுகிறது. இந்த கோரிக்கைகள் குறித்து கட்சியின் உள்துறை ஆலோசனைகள் தேசிய மட்டத்திலும் பகிரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகுதி பங்கீடு
மேலும் தேர்தலை முன்னிட்டு களப்பணிகள் தீவிரப்படுத்துவது, தொகுதி வாரியாக புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது போன்ற அமைப்பு தொடர்பான விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் தயாரிப்பை விரைவுபடுத்தும் வகையில் கட்சியின் அமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொகுதி கணக்கீடும் சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது.
பாஜக தமிழ்நாடு
கூட்டணியில் பாஜக மட்டுமின்றி பல்வேறு கூட்டணி கட்சிகளும் இடம் பெற்றுள்ளதால், ஒவ்வொரு கட்சிக்கும் வழங்க வேண்டிய தொகுதி எண்ணிக்கை குறித்து சமநிலை காண வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் பாஜக கோரிக்கையை முழுமையாக ஏற்க அதிமுக தயக்கம் காட்டும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
2026 சட்டமன்ற தேர்தல்
கடந்த தேர்தலின் அனுபவத்தை கருத்தில் கொண்டு, இம்முறை அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை குறையாமல் பாதுகாக்க வேண்டும் என்ற அணுகுமுறையில் கட்சி தலைமை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் வாய்ப்பும் நிலவுவதால், தொகுதி பங்கீடு மேலும் சிக்கலாகும் சூழல் உருவாகியுள்ளது. இதன் விளைவாக, பாஜக கோரிய அளவுக்கு குறைவான தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படலாம் என்ற அரசியல் கணக்கே நிலவுகிறது.
அதிமுக திட்டம்
எனினும், இறுதி முடிவு கூட்டணி தலைமை மட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னரே வெளியாகும் என கூறப்படுகிறது. மொத்தத்தில், தொகுதி பங்கீடு தொடர்பான இந்த ஆலோசனைகள், தமிழகத்தில் தேர்தல் அரசியல் சூழல் தீவிரமடைந்து வருவதை காட்டுகின்றன. இந்நிலையில் திமுகவும் அடுத்த வாரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications