Election Exclusive: சீட்டுக் கட்டாய் சரியுதே காங்கிரஸ்..2ஆக பிரிந்து நிற்கும் கதர்கள்! கதறல் சத்தம் டெல்லிக்கு கேக்குதா?
திண்டுக்கல்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? அல்லது முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அளவில் இரு பிரிவுகள் உருவாகி இருக்கின்றன. திமுக கூட்டணியை தொடர வேண்டும் என ஒரு பிரிவினரும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டுமென மற்றொரு தரப்பும் சமூக வலைதளங்களில் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளது.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது 2026 சட்டமன்ற தேர்தல் களம். மிகப்பெரிய கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. அசுர பலத்துடன் திமுக இருக்கிறது என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு தமிழகத்தின் மிக முக்கிய கட்சிகள் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவாக, கொமதேக உள்ளிட்ட பல கட்சிகள் இருக்கிறது. ராமதாஸ் தரப்பும் திமுகவுடன் கூட்டணி அமைக்க இறுதி கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
இது ஒருபுறம் இருக்க திமுக கூட்டணியில் பல ஆண்டுகளாக அங்கம் வகிக்கும் காங்கிரஸின் நிலைமை தான் கேள்விக்குறியாக இருக்கிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் வரவால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம் எனக் கூறி அதிர வைத்தனர் காங்கிரஸ் கட்சியினர். உண்மையை சொல்ல போனால் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தனித்த செல்வாக்கு இல்லை. 1950 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய அளவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதில்லை. ஒருவேளை வெற்றி பெற்றிருந்தாலும் அது திமுக அல்லது அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்த போதுதான்.
காங்கிரஸ் தொகுதி பங்கீடு
இந்த நிலையில் இந்தியாவின் பல தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் தமிழகத்தில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக கருதி கூடுதல் தொகுதிகளை கேட்டு அடம் பிடித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தையும் கேட்க முடிந்தது. ஆனால் அதற்கெல்லாம் இடமே இல்லை என திட்டவட்டமாக மறுத்த திமுக, அதிக தொகுதிகளையும் ஒதுக்க முன்வரவில்லை. 40 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்கும் நிலையில் 25 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை
இதை அடுத்து தமிழகத்தில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்று நடைபெறும் சந்திப்பில் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படலாம் என சொல்கின்றனர். இந்த நிலையில் திமுக கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள்ளையே அதிர்ச்சி குரல்கள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன. சமூக வலைதளங்கள் இரு தரப்பாக பிரிந்து பேச்சுவார்த்தை வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்று திமுகவுடன் இருக்க வேண்டும், மற்றொன்று விஜயுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று.
காங்கிரஸ் உட்கட்சி மோதல்
தமிழகத்தை பொறுத்தவரை இப்போதைக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் எம்பிக்களும் இருக்கிறார்கள் என்றால் அதற்கு திமுக தான் காரணம். வாக்கு வங்கி சரிந்து நிலையில் திமுக தான் காங்கிரசுக்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் உரிய மரியாதை கொடுத்து தொகுதிகளையும் ஒதுக்கியது. இந்த நிலையில் விஜய் காரணம் காட்டி அதிக தொகுதிகளை கேட்கக் கூடாது. அதே நேரத்தில் உரிய மரியாதையுடன் கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றம் செல்ல வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கும் அதிகாரம் கிடைக்கும் என ஒரு தரப்பு கூறி வருகிறது.
விஜய் அரசியல் கட்சி
மற்றொரு தரப்பு குறிப்பிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் எம்பி எம்எல்ஏ பதவிகளை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் தொண்டர்களுக்கு என்று காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை. தனித்து போட்டியிடாமல் திமுகவின் ஒரு அங்கமாகவே தனது அடையாளத்தை தொலைத்து நிற்கிறது காங்கிரஸ். விஜய்க்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இருக்கும் நிலையில் அதனை பயன்படுத்தி வெற்றி பெற விட்டாலும் காங்கிரஸ் குறிப்பிட தகுந்த வாக்கு சதவீதத்தை பெறலாம்.
3வது கூட்டணி
இது தேசிய அளவில் கவனத்தை பெறும். ஆளும் ஆண்ட கட்சிகள் தவிர்த்து மூன்றாவது கூட்டணியை உருவாக்கிய அதிக வாக்கு சதவீதம் பெற்ற கட்சி என்ற பெருமையும் காங்கிரசுக்கு கிடைக்கும். எனவே விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என சொல்லி வருகின்றனர் ஒரு தரப்பு. இப்படி இருதரப்பாக காங்கிரஸ் முட்டி மோதிக்கொண்டிருக்கும் நிலையில் அறிவாலயம் என்ன முடிவெடுக்க போகிறது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications