Election Exclusive: கூட்டிக் கழிச்சுப் பார்த்த ஸ்டாலின்.. யார் யாருக்கு எவ்வளவு? கால்குலேட்டரும் கையுமாக அறிவாலயம்! பரபர
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக தேமுதிக கூட்டணி அமைந்திருக்கிறது. இதனால், தான் போட்டியிடும் தொகுதிகளை சற்று குறைத்துக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கு கடந்த ஆண்டு போலவே தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக 164 தொகுதிகளிலும், காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 7 முதல் 1 தொகுதி வரை போட்டியிடலாம் என்கின்றனர். தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடாகி வருகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரமாக்கி வருகின்றன.
இந்த முறை நான்கு கட்சிகள் இடையே நேரடி போட்டி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் அறிக்கை தயார் செய்தல் போன்ற பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

திமுக கூட்டணி
ஏற்கனவே திமுக, கனிமொழி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து தேர்தல் அறிக்கை தயாரிப்பை தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த தேர்தலிலும் மிகப்பெரிய கூட்டணி பலத்துடன் திமுக தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. மேலும் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களும் உடன் இருக்கின்றனர்.
பிரேமலதா விஜயகாந்த்
இந்த நிலையில் பிரேமலதா வரவால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சற்றே சிக்கல் இருக்கலாம் சொல்லப்படுகிறது. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டு, காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த தேர்தலில் திமுக 133 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அதே போன்ற கணக்கை 2026 தேர்தலிலும் தொடர விரும்புகிறது திமுக.
திமுக தொகுதி பங்கீடு
ஆனால், இந்த முறை தேமுதிக மட்டுமல்லாமல், மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமக பிரிவு, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் கூட்டணியில் இடம் பெறும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், திமுக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை 174-இல் இருந்து 164ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு பகிர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சீட் ஒதுக்கீடு
தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, திமுக - 164, காங்கிரஸ் - 25, விசிக - 7, தேமுதிக - 7, மதிமுக - 6, ம. கம்யூனிஸ்ட் - 6, இ. கம்யூனிஸ்ட் - 6, மமக - 4, முஸ்லிம் லீக் - 4, மநீம - 3, கொங்கு மதேக- 3, எஸ்டிபிஐ - 1 என சீட் ஒதுக்கீடு இருக்கும் என சொல்லப்படுகிறது. கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வந்தாலும் அவர் தரப்பில் தற்போது இருக்கும் அருள், ஜி கே மணி உள்ளிட்ட எம்எல்ஏக்களை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
கூட்டணி அதிருப்தி?
இதனால் தனிப்பெரும்பான்மையையும் கிடைக்கும் கூட்டணி கட்சிகளையும் திருப்திப்படுத்த முடியும் என அறிவாலயம் கணக்கு போட்டுள்ளது. ஆனால் இந்த கணக்குக்கு கூட்டணி கட்சிகள் ஒப்புக் கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. தேமுதிகவை விட விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கும் நிலையில் அதற்கு இணையான சீட்டுகளை பெற ஒப்புக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் கூடுதலாக சீட்டுகளை கேட்கலாம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications