Election Exclusive: ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல..அம்பத்தூரில் அய்யாவுக்கு ஆப்பு! மது குடிப்போர் கையில் சிலிண்டர்
சென்னை: தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், பாமகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக மகனும், பாமக தலைவருமான அன்புமணிக்கு போட்டியாக பாமக நிறுவனர் ராமதாஸ் 35 வேட்பாளர்களை அறிவித்துள்ளார். ஆனால், அவர்களுக்கு ஒரே சின்னம் கிடைக்காத நிலையில், சிலிண்டர், குக்கர், பச்சை மிளகாய் உள்ளிட்ட பல சின்னங்களில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வன்னியர்கள் அதிகமுள்ள அம்பத்துார் தொகுதியில், சிலிண்டர் சின்னத்தில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் போட்டியிடுவது ராமதாஸ் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் இணைந்திருக்கும் நிலையில் பாமகவின் நிறுவனரான ராமதாஸ் திமுகவுடன் பேச்சு நடத்தினார். விசிகவை காரணம் காட்டி ராமதாசை திமுக கூட்டணிக்குள் சேர்க்கவில்லை.

இந்நிலையில், மீண்டும் அதிமுக கூட்டணி கதவை ராமதாஸ் தட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ராமதாஸுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என அன்புமணி தரப்பு தெள்ளத் தெளிவாக சொல்லி உள்ளது. இதை அடுத்து ராமதாஸ் தரப்புக்கு அதிமுக கூட்டணியில் இடமில்லை என எடப்பாடி தரப்பு சொல்லிவிட்டது.
பாமக உட்கட்சி பிளவு
இதற்கிடையே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக கூட்டணியில் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதே நேரத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சசிகலா கட்சியுடனான அணியுடன் இணைந்து பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இதனால் ஒரே கட்சியில் இருந்த முன்னாள் இன்னாள் நிர்வாகிகள் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது.
ராமதாஸ்
இந்நிலையில், ராமதாஸ் அறிவித்த வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதால், பல்வேறு சின்னங்களில் அவர்கள் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. சில தொகுதிகளில் 'சிலிண்டர்' சின்னம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற இடங்களில் 'குக்கர்', 'பச்சை மிளகாய்' போன்ற சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சின்னம் தான் தற்போது ராமதாஸ் ஆதரவாளர்களின் குழப்பத்திற்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது.
'சிலிண்டர்' சின்னம்
இந்த சூழ்நிலையில், அம்பத்தூர் தொகுதியில் எதிர்பாராத வகையில் 'சிலிண்டர்' சின்னத்தில் 'மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்' சார்பில் போட்டியிடும் எம்.எஸ். ஆறுமுகம் என்பவருக்கு ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். தற்போது 'சிலிண்டர்' சின்னத்துடன் பிரசாரம் செய்து வருகிறார் எம்.எஸ். ஆறுமுகம். இதனால், அந்த சின்னம் ராமதாஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கே என நினைக்கும் வாக்காளர்கள் குழப்பமடையும் வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.
அம்பத்தூர் தொகுதி
அதே நேரத்தில், அம்பத்தூர் தொகுதி அதிமுக. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பாமக போட்டியிடும் நிலையில், அவர் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறாது. அம்பத்தூர் தொகுதி வன்னியர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், ராமதாஸ் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால் 'சிலிண்டர்' சின்னத்தை பார்த்து வாக்காளர்கள் தவறுதலாக வேறு வேட்பாளருக்கு வாக்களித்து விடுவார்களோ என்ற அச்சம் ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
வாக்கு சிதறல்
மேலும், ஒரே கட்சியில் இருந்த நிர்வாகிகள் வேறு வேறு கூட்டணிகளில் போட்டியிடும் சூழ்நிலை உருவானதால், பல தொகுதிகளில் நேரடி மோதல் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மனு திரும்ப பெறப்பட்டதாலும், சில இடங்களில் மனு நிராகரிக்கப்பட்டதாலும் போட்டி சற்று மாறியிருந்தாலும், முக்கிய தொகுதிகளில் போட்டி தீவிரமாகவே உள்ளது. இதனால் வாக்கு சிதறல் ஏற்படுமா?வாக்காளர்கள் சரியான வேட்பாளரை அடையாளம் கண்டு வாக்களிப்பார்களா? என்ற கேள்வி உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications