Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா?
சென்னை: 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் மெதுவாக சூடுபிடித்து வருகிறது. முக்கிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், 3வதாக புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்புகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
அரசியல் கூட்டணியின்றி தனித்து விடப்பட்டிருந்த ராமதாஸ், சசிகலா தலைமையிலான அஇபுதமமுக தரப்பும் இணைந்து செயல்படத் தொடங்கியிருப்பது அரசியல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த கூட்டணியில் ஒருவேளை விஜய் தலைமையிலான தவெக இணைந்தால் எப்படி இருக்கும்? என அரசியல் களத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது முக்கியமான இரண்டு பெரிய கூட்டணிகள் உருவாகி உள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. மறுபக்கம், அதிமுக தலைமையிலான அணியில் பாஜக மற்றும் சில கூட்டணி கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

2026 சட்டசபை தேர்தல்
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் மூன்றாவது அணி உருவாகுமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. சமீபத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சசிகலா இணைந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கூட்டாக போட்டியிட உள்ளதாக அறிவித்தது புதிய அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.
மூன்றாவது அணி
பாமகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பிரச்சனைகளால் சின்னம் மற்றும் கட்சி தொடர்பான சிக்கல்களை சந்தித்து வரும் ராமதாஸ் தரப்புக்கும், அதிமுகவிலிருந்து தனித்து செயல்பட்டு வரும் சசிகலா தரப்புக்கும் இந்த கூட்டணி ஒரு புதிய வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த சூழலில், தவெக தலைவர் விஜய் இந்த கூட்டணியில் இணைந்தால் அது தேர்தல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
விஜய் சசிகலா ராமதாஸ்
குறிப்பாக, வட மாவட்டங்களில் வன்னியர் சமூக வாக்குகள் மீது ராமதாஸ் தரப்புக்கு ஒரு அளவு செல்வாக்கு இருப்பதாக அரசியல் கணக்குகள் கூறுகின்றன. அதேபோல், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சசிகலாவுக்கு முக்குலத்தோர் சமூக ஆதரவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மறுபக்கம், விஜய்க்கு இளம் வாக்காளர்கள், நகர்ப்புற மக்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க வரும் இளைஞர்களிடம் ஒரு அளவு வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தவெக விஜய்
இந்த மூன்று தரப்பினரும் இணைந்தால், வாக்கு சிதறலை ஏற்படுத்தும் வகையில் ஒரு வலுவான மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதேநேரத்தில், இந்த கூட்டணி உருவானால் விஜய்க்கு என்ன லாபம் என்ற கேள்வியும் எழுகிறது. முதன்முறையாக தேர்தல் களத்தை சந்திக்க உள்ள விஜய்க்கு, தனித்து போட்டியிடுவது மூலம் தனது கட்சியின் வாக்கு வங்கியை சோதித்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மூன்றாம் கூட்டணி கணக்கு
ஆனால் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் இருந்தால், குறைந்தபட்சம் சில அனுபவம் வாய்ந்த கட்சிகளின் ஆதரவு அவசியமாக இருக்கும் என்பது அரசியல் உண்மை. அந்த வகையில், ராமதாஸ் மற்றும் சசிகலா போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களின் ஆதரவு கிடைத்தால், பல பகுதிகளில் கட்சியின் வாக்கு வங்கி விரிவடையும் வாய்ப்பு உள்ளது. மற்றொரு பக்கம், ராமதாஸ் மற்றும் சசிகலா தரப்புக்கும் இந்த கூட்டணியில் சேர்வதால் பலன் இருக்கலாம்.
தவெக பாமக சசிகலா
தனித்து போட்டியிட்டால் குறைந்தளவிலான தாக்கமே இருக்கும் என்ற நிலைமையில், விஜயின் பிரபலத்துடன் இணைந்தால் அதிக கவனம் பெறும் வாய்ப்பு உருவாகும். மேலும், தவெக தலைமையில் ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் வாய்ப்பும் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருக்கலாம். ஆனால் இந்த கூட்டணி நடைமுறையில் உருவாகுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படாத கேள்வியாகவே உள்ளது.
தமிழக அரசியல்
குறிப்பாக முதல்வர் வேட்பாளர் யார் என்பது போன்ற கேள்விகள் எழும் வாய்ப்பு அதிகம். விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க ராமதாஸ் மற்றும் சசிகலா தரப்புகள் தயாராக இருக்கிறார்களா என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கியமான விவாதமாக உள்ளது. மொத்தத்தில் பார்க்கும்போது, ராமதாஸ் - சசிகலா கூட்டணியில் விஜய் இணைந்தால், தமிழக தேர்தல் களத்தில் புதிய திருப்பம் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது இரண்டு பெரிய கூட்டணிகளுக்கும் சவாலாக மாறக்கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications