அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள்
சென்னை: சட்டசபை தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில், பணப் பட்டுவாடா செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் சேகர்பாபுவின் மகன்கள் நடத்தி வரும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள சில இடங்களில் இன்று காலை முதலே அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, மயிலாப்பூர், வடபழனி, கீழ்பாக்கம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் சிவசாமி சாலையில் உள்ள நிறுவனத்தில் இன்று காலை 10 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சிஎம்டிஏ தொடர்பான அரசு ஒப்பந்தங்களை எடுக்கும் இந்த நிறுவனத்தை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களான விக்னேஷ், ஜெயசிம்மன் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் சேகர்பாபு, இந்த முறையும் துறைமுகம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக அவர் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது மகன்கள் நடத்தி வரும் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு நடந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சென்னை கீழ்ப்பாக்கத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் தொழிலதிபர் பிரேம் குமார் என்பவரது வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் அரசு ஒப்பந்தங்களை எடுத்து வரும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அடையாறு பகுதியிலும் சோதனை நடந்து வருவதாக தெரிகிறது. இதே போல திருச்செந்தூர் கோவில் தக்காராக இருந்தவரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக கூறி வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்ததையடுத்து சென்னையில் இன்று 5 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications