நெருங்குது சட்டசபை தேர்தல்.. மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை!
சென்னை: தமிழக சட்டபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றுடன் எஸ்.ஐ.ஆர் படிவங்களை திருப்பி அளிப்பதற்கான கால அவகாசம் முடிவடையும் நிலையில் தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது தேர்தல் ஆணையம்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து 15 துறைகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு காவல்துறை, வருமான வரித்துறை, வணிவரித்துறை, தபால் துறை, ரயில்வே, சிஆர்பிஎப், விமான நிலையங்கள் ஆணையரகம், போதைப் பொருள் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் ஒவ்வொரு துறை சார்பில் தேர்தலை எதிர்கொள்ள செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இன்றும், மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. டிசம்பர் 4 ஆம் தேதி வரை பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருவாரம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்பி, திரும்ப அளிப்பதற்கு இன்றே கடைசி நாள்.
நேற்றைய நிலவரப்படி 12 மாநிலங்களிலும் 99.98 சதவிகித படிவங்கள் விநியோகிக்கப்பட்டு, 99.59 சதவிகித படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களில் 99.99% படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அதாவது 4,201 பேருக்கு மட்டுமே படிவங்கள் வழங்கப்படவில்லை. விநியோகிக்கப்பட்டதில் 99.95% படிவங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. அதாவது 26,967 பேர் மட்டுமே படிவங்களை திருப்பி அளிக்கவில்லை.
எஸ்.ஐ.ஆர். படிவங்களை திருப்பி அளித்தவர்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் எஸ்.ஐ.ஆர். 2026 என்ற பகுதிக்குச் சென்று செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்களை அளித்து, தங்களது படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளலாம்.
டிசம்பர் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரை மாற்றங்கள் செய்ய விரும்புவோர் உரிய படிவங்களில் விண்ணப்பிக்கலாம். ஜனவரி ஒன்றாம் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் படிவம் 6, வெளிநாட்டில் இருப்பவர்கள் படிவம் 6ஏ, பெயர் சேர்க்க மற்றும் நீக்குவதற்கான ஆட்சேபனைகளை தெரிவிப்போர் படிவம் 7, முகவரி மாறியவர்கள் படிவம் 8 ஆகியவைகளை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து, படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, பிப்ரவரி 14 ஆம் தேதி இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர். பணிகள் சில மாநிலங்களில் முடிவடையாத நிலையில், மேலும் அவகாசம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் தேர்தல் ஆணையம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிகிறது.
இதனிடையே 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என, தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 6,648 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில், 80 வாக்குச்சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், தமிழ்நாட்டில் உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 75,035 ஆக அதிகரித்துள்ளது












Click it and Unblock the Notifications