அசோக் லேலண்டுக்கு பறந்த 500 எலக்ட்ரிக் பஸ்களுக்கான ஆர்டர்! சென்னையில் காற்று மாசை குறைக்கும் MTC
சென்னை: சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், இந்த பாதிப்பை குறைக்க மின்சார பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவெடுத்திருந்தது. இந்த பேருந்துகள் 2025 ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அசோக் லேலண்டுக்கு 500 மின்சார பேருந்துகளுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) ஆர்டர் கொடுத்திருக்கிறது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் சென்னை முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். சுற்றுலா, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் என பல்வேறு காரணங்களுக்காக சென்னையை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, இதற்கேற்ப போக்குவரத்து பயன்பாடும் அதிகரித்திருக்கிறது.

கடந்த 2020ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் மொத்தம் 60 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் இருக்கின்றன. கடந்த 1992 ல் வெறும் 6 லட்சம் வாகனங்கள்தான் இருந்தன. இந்த உயர்வு மக்களுக்கு பயணித்தாலும், மறுபுறம் காற்று மாசு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசு முதன்மையானது, இதனை தொடர்ந்து அதிக வாகன பயன்பாடுகள் பல்வேறு விதங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
எனவே, இந்த பிரச்னையை குறைக்க, மின்சார பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர போக்குவரத்து கழகங்கள் ஆலோசித்திருந்தன. அந்த வகையில் வரும் 2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகளை அதிகமாக பார்க்க முடியும்.
உலக வங்கியுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் 500 மின்சார தாழ்தள பேருந்துகளை போக்குவரத்து கழகம் வாங்க இருக்கிறது. இதில் 100 பேருந்துகள் ஏசி பேருந்துகளாகும். இவை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பயன்பாட்டுக்கு வருகின்றன.
தற்போது டீசல் பேருந்துகளுக்கு ஒரு கி.மீக்கு ரூ.116 செலவழிக்கப்படுகிறது. இதே மின்சார பேருந்துகள் எனில், ஒரு கி.மீ.க்கு ரூ.77.16 மட்டுமே செலவாகும். இதில் ஏசி பேருந்துகளுக்கு ரூ.80.86 செலவாகும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்திருக்கிறார். பேருந்துகளுக்காக அசோக் லேலண்ட் மற்றும் ஸ்விட்ச் மொபிலிட்டியின் துணை நிறுவனமான OHM, EVEY டிரான்ஸ் மற்றும் ஏரோகிள் ஆட்டோமொபைல்ஸ் என மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
12 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. பேருந்துகளை இயக்குதல், பராமரிப்பு உதிரி பாகங்கள் வாங்குதல் உள்ளிட்டவற்றிக்கு இந்த நிறுவனங்களே பொறுப்பு. சென்னை போக்குவரத்து கழகம், கட்டணங்களை வசூலிக்க நடத்துனரை நியமிக்கும். இந்த வகை பேருந்துகள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கி.மீ வரை இயங்கும். தற்போது திட்டமிடப்பட்டுள்ளதை கொண்டு பார்க்கும்போது, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய டெப்போக்களிலிருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என தெரிய வந்திருக்கிறது.
இந்த திட்டத்திற்கு மொத்த செலவு ரூ.959 கோடி ரூபாயாகும். இதில் 70% நிதியை உலக வங்கியும், 30% நிதியை மாநில அரசும் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications