சென்னை மக்களே கவனம்.. கடற்கரை - தாம்பரம் இடையே இன்று மின்சார ரயில் சேவை ரத்து!
சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புறநகர் சேவையாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் ஏராளமான மக்கள் தினமும் பயணித்து வருகின்றனர். புறநகர் ரயில் சேவையை பயன்படுத்துவதன் மூலம் சென்னையில் சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்காமல் விரைவாக பயணிக்க முடிகிறது.

இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளி - கல்லூரி மாணவ-மாணவிகள், வியபாாரிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் இன்று சென்னை புறநகர் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் வரை அமைக்கப்பட்டுள்ள 4வது தண்டவாளத்தில் இன்று ரயில்களை இயக்கி சோதனை என்பது நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செ்யப்பட்டு, தாம்பரம் வழியாக மட்டுமே இயக்கப்படும்.
இந்த ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் என்பது இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில்கள் ரத்து காரணமாக இன்று கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை ரத்து காரணமாக இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பஸ்கள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பஸ்கள், பல்லாவரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு 5 பஸ்கள் என்று மொத்தம் 50 பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது. இதுதவிர பயணிகளின் தேவைக்கேற்ப்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications