கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! மின்சார வாரியம் விடுத்த பரபரப்பு எச்சரிக்கை! தங்கம் தென்னரசு உத்தரவு?
சென்னை: நாளை மின்வாரிய ஊழியர்கள் போராடினால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க நாளை போராட்டம் நடத்த மின்வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். பல்வேறு விஷயங்களை கோரிக்கைகளாக வைத்து போராட்டம் நடத்த இவர்கள் முடிவு செய்துள்ளனர். மின்சார ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வைத்து வருகின்றனர்.,

ஆனால் இந்த கோரிக்கைகளை தமிழ்நாடு மின் வாரியம் இதுவரை நிறைவேற்றியது இல்லை. இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை தமிழ்நாடு முழுக்க இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டம் செய்யும் நாள் பணி விடுப்பு நாளாக கருத்தில் கொள்ளப்படும். இதை விடுமுறை நாளில் கழித்துக்கொள்ள முடியாது. மாறாக லாஸ் ஆப் பே நாளாக கணக்கில் எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோரிக்கைகள் என்னென்ன: மின்வாரிய ஊழியர்கள் பின் வரும் கோரிக்கைகளை வைத்து உள்ளனர். அதன்படி, உடனடியாக 4 சதவிகிதத்திற்கு மேல் மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர வேண்டும். தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் கேங்மேன்கள் தேர்வு பெற்றுள்ளனர். இப்படி தேர்வு பெற்ற 5000 கேங்மேன்களுக்கு உடனே பணி நியமனம் வழங்க வேண்டும்.
ஏற்கனவே பனி நியமனம் வழங்கப்பட்ட கேங்மேன்களுக்கு வேறு ஊர்களில் போஸ்டிங் போடப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உடனே உள்ளூரில் போஸ்டிங் கொடுக்க வேண்டும். 2 ஆண்டுகளாக வெளியூரில் வேலை பார்க்கும் கேங்மேன்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களுக்கு உள்ளூரில் போஸ்டிங் போட வேண்டும்.
ஏற்கனவே இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள், பகுதி நேர பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றி உத்தரவிட வேண்டும். கருவூலத்தில் ஊதியம் வழங்கும் முறை தற்போது நடைமுறையில் இல்லை. 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிபவர்களுக்கு இந்த சலுகையை கொடுக்க வேண்டும். அவர்கள் கருவூலத்தில் ஊதியம் பெற வேண்டும்.
இதற்கு முன்பாகவே சென்னையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன் தர்ணா போராட்டங்களை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொண்டனர். ஆனால் அப்போது மின் வாரியம் இவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. மின் வாரியத்தின் வாரிய செயலாளர் மணிக்கண்ணன் எங்களின் கோரிக்கைகளை ஏற்பது இல்லை.
அதனால் அவரை உடனே மாற்ற வேண்டும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் தங்களின் கோரிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சார்பில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் அமைச்சரவை பொறுப்புகள் வேறு அமைச்சருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
செந்தில் பாலாஜி மின்சார துறை அமைச்சராக இருந்த வரை மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்கவில்லை. செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத் துறை தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முக்கியமாக அமைச்சரவை மாற்றப்பட்டாலும், செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத மந்திரியாக தொடர்கிறார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி இல்லாத நேரத்தில் தங்கம் தென்னரசு இந்த விவகாரத்தில் முக்கிய முடிவு எடுப்பாரா?
அல்லது செந்தில் பாலாஜிதான் நிரந்தரமான துறை அமைச்சர் என்பதால் அவர் வந்ததும் அவருக்கு துறை மாறிய பின் அவரே முடிவு எடுத்துக்கொள்ளட்டும் என்று தங்கம் தென்னரசு விட்டுவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications