மின்சார வாரியம் தந்த சர்ப்ரைஸ்.. ஒரு யூனிட் ரூ.9.50க்கு வாங்குவதா? 5 வருஷமா என்ன பண்ணீங்க: அன்புமணி
சென்னை: தமிழக மின்சார வாரியம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வரும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மின்சாரத்தை வாங்க அனுமதி கோரியுள்ளது... உடனடி தேவைக்காக இது சரியான முடிவு என்றாலும், நீண்ட காலத்திற்கு இது ஆரோக்கியமான தீர்வு அல்ல என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.. இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி முக்கிய கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளார்.
தற்போதைய மின்சார தேவையானது தினமும் சராசரியாக 16,000 மெகாவாட் உள்ளது.. இதுவே கோடை காலத்தில் 20,000 மெகாவாட் ஐ தாண்டிவிடுகிறது. இதனால் மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது.
அந்தவகையில் மின்வாரியம், வரும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை, இரவு நேரத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.9.50 வரை வாங்க அனுமதி மின் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரியுள்ளது. அந்த காலத்தில், தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தனி சூழ்நிலைக்கான மின்சாரம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக மின்சார வாரியம்
அதே நேரத்தில், நாள்கணிக்கில் 24 மணி பயன்படுத்தப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட் ₹5.40 முதல் ₹6.35 வரை விலைக்கு வாங்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார தேவையை நிறைவேற்ற முடியும் என்பதுடன் கோடை காலத்தில் மின்சார பற்றாக்குறையை தவிர்க்க முடியும் என்று நம்பப்படுகிறது.
அதாவது, கோடை காலத்தில் மின்சார தேவை கடுமையாக உயரும் போது மின்தடை ஏற்படாமல் இருக்க இந்நடவடிக்கை உதவும். குறிப்பாக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உச்ச நேரத்தில் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டால், உயர்ந்த விலை கொடுத்து, மின்சாரம் வாங்குவதன் மூலம் மக்கள் மற்றும் தொழில்துறைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும். அதனால் இது நடைமுறை ரீதியாக தேவையான முடிவாக கருதப்படுகிறது.
மின்வாரியம் தந்த சர்ப்ரைஸ்
ஆனால் அதேசமயம், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.9.50 வரை வாங்குவது நீண்ட காலத்தில் பெரிய பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்ற கருத்தும் பரவலாக எழுந்துள்ளது.. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் மின்சார வாரியத்திற்கு இது கடன் சுமையை மேலும் அதிகரிக்கும்... இதன் தாக்கம் எதிர்காலத்தில் மின் கட்டண உயர்வாக மக்களிடம் மாற்றப்படலாம் என்ற அச்சமும் உள்ளது.
இப்படி ஒவ்வொரு கோடைகாலத்திலும் இதே நிலை வருவது, மின்சார உற்பத்தி மற்றும் திட்டமிடலில் நிரந்தர தீர்வு இல்லை என்பதையே காட்டுவதாகவும், சூரிய மின், காற்றாலை மின், சேமிப்பு வசதி போன்றவற்றில் போதிய முதலீடு செய்யப்பட்டிருந்தால், இவ்வளவு உயர்ந்த விலையில் அவசர கொள்முதல் செய்ய வேண்டிய நிலை குறைந்திருக்கும் என்றும் பொதுமக்களின் ஒரு தரப்பினர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்..
யூனிட் ரூ.9.50 கொடுத்து வாங்க ஏன் அவசரம்
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை ஒன்றை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.. அதில், "தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மாலை நேர மின் தேவையை சமாளிப்பதற்காக 1553 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுவதாகவும், அந்த அளவு மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.8.50 முதல் ரூ.9.50 வரை விலை கொடுத்து வாங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் விண்ணப்பித்திருக்கிறது.
இந்த அளவுக்கு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது மின்வாரியத்திற்கு இழப்பையே ஏற்படுத்தும். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறையவில்லை.
மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியமே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி மாநிலத்தின் மொத்த மின் தேவையில் வெறும் 16% மட்டுமே மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரை ஒரே ஒரு மெகாவாட் அளவுக்கு கூட புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
கடந்த ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவை 13,860 கோடி யூனிட் எனும் நிலையில், அதில் 80.66 விழுக்காடான 11 ஆயிரத்து 179 கோடி யூனிட் மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பு, தனியார் மின் நிறுவனங்கள், மின்சார சந்தைகள் ஆகியவற்றிடம் இருந்து தான் மின்சார வாரியம் வாங்கியிருக்கிறது. இவ்வாறு வாங்குவதற்காகவே மின்னுற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தாமல் திமுக அரசு தாமதப்படுத்தி வருகிறது.
ஒழுங்குமுறை ஆணையம் ஆணையிட வேண்டும்
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்திய பிறகும் மின்சார வாரியம் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது. காரணம்.... தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவது தான். மீண்டும், மீண்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது.
சந்தை சராசரி விலையைக் கணக்கிட்டு, அதற்கும் குறைவான விலையிலேயே 1553 மெகாவாட் மின்சாரத்தையும் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் ஆணையிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார் அன்புமணி ராமதாஸ்,..!!!












Click it and Unblock the Notifications