புதிதாக வீடு கட்டுவோருக்கு.. மின் மீட்டரில் மாற்றம்? தமிழக மின்சார துறைக்கு போன பெயிராவின் கோரிக்கை
சென்னை: பொதுமக்களின் நலன்கருதி, தமிழக அரசுக்கு பெயிரா விடுத்துள்ள கோரிக்கையானது, பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.. அப்படியென்ன கோரிக்கை விடுத்துள்ளார் டாக்டர் ஹென்றி?
கடந்த வருடம்வரை பொதுவாக புதிய மின் இணைப்பு பெறவேண்டுமானால் அதற்கு 30 நாட்கள் வரை அவகாசம் ஆகும்.. ஆனால் தமிழ்நாட்டில் புதிதாக மின் இணைப்பு வாங்கும் நபர்களுக்கு உடனுக்குடன் மின் இணைப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகினறன..

விண்ணப்பங்கள்: அந்தவகையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சில பரிந்துரைகளின்படி, புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போருக்கு 7 நாட்களுக்குள் இணைப்பை வழங்கியாக வேண்டும். அப்படி வழங்க முடியாவிட்டால், 10 நாட்களுக்கு பின்பான நாட்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
இதற்குபிறகு, புதிதாக மின்இணைப்பு கோரி நுகர்வோர் விண்ணப்பிக்கும் இடத்தில் மின்மாற்றிகள் இல்லையென்றால் 90 நாட்களும், மின்கம்பங்கள் இல்லையென்றால் 60 நாட்களுக்குப் பிறகு மின்இணைப்பு வழங்குவது நடைமுறையாக உள்ளது.
மின்மாற்றிகள்: அதேபோல, மின்மாற்றி, பில்லர் பாக்ஸ், மின்கம்பம் ஆகியவை உள்ள இடங்களில் மின்இணைப்பு கோரி விண்ணப்பித்தால் 3 முதல் 7 நாட்களுக்குள் நுகர்வோருக்கு மின்இணைப்பு வழங்க வேண்டுமென மின்வாரியம் கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழலில், மின் இணைப்பு (1A) கோரி விண்ணப்பித்து பல நாட்கள் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மின்மீட்டர்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று பெயிரா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்தவகையில், புதிதாக வீடு கட்டும் பொது மக்களின் நலன் கருதி, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ளதாவது:
வீட்டு மனைகள்: "தமிழகத்தில் இருக்கின்ற பெருநகரங்களின் புறநகர் பகுதிகளில் அதிகளவில் பொதுமக்களும், கட்டுனர்களும் மனைகளை வாங்கி ஆர்வமாக வீடுகளை கட்டும் பணியை மேற்கொள்கின்றனர்.
அப்படிப்பட்ட பொதுமக்கள் வீடுகளை கட்டுவதற்காக மின் இணைப்பு (1A) கோரி விண்ணப்பித்து பல நாட்கள் காத்திருந்தும் தற்பொழுது மின்சார அலுவலகத்தில் போதிய மின் மீட்டர்கள் இல்லாத காரணத்தால் மின்சார அலுவலகத்தை அணுகும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கும் அலைக்கழிப்புக்கும் உள்ளாகும் சூழ்நிலை
தற்போது ஏற்பட்டுள்ளது.
மின் இணைப்புகள்: பல மாதங்கள் கடந்தும் மின்சார அலுவலகத்தில் போதிய அளவில் மின் மீட்டர்கள் இல்லாததால் மின் இணைப்பு பெற இயலவில்லை. மின் இணைப்பு பெறாததால் உரிய நேரத்தில் பொதுமக்கள் திட்டமிட்டபடி வீடுகள் கட்ட இயலவில்லை. மேலும் வீடு கட்ட வங்கிகளில் கடன் பெற்ற பொதுமக்களும், வாடிக்கையாளர்களுக்கு வீடுகளை முன்பதிவு செய்த கட்டுனர்களும் மின்சாரத் துறையின் இந்த செயலால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ஆகவே மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்கள் மேற்கண்ட வீடு கட்டும் பணியை மேற்கொள்கின்ற கட்டுனர்கள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருதி, மேற்கண்ட பிரச்சினையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, கனிவுடன் பரிசீலித்து, மின் மீட்டர் பற்றாக்குறையை போக்கிட வேண்டும்.
வெளிச்சந்தைகள்: புதிதாக வீடுகளை கட்டுகின்ற பொதுமக்களுக்கும், கட்டுனர்களுக்கும் போதிய அளவிற்கு தங்கு தடை ஏதுமின்றி மின்துறை சார்பில் மின் மீட்டரை விநியோகித்தோ, அல்லது நுகர்வோர் தரப்பில் மின் மீட்டரை வெளிச்சந்தையில் இருந்து வாங்கி பொருத்திக் கொள்ளும் வகையிலோ உரிய நடவடிக்கையை மேற்கொண்டு, விரைவில் வழிவகை செய்ய வேண்டும்" என்று பெயிரா தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுமக்கள் நலன் கருதி மின்துறை அமைச்சருக்கு எழுதியிருக்கும் டாக்டர் ஹென்றி எழுதியிருக்கும் இந்த கடிதம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.. இதுகுறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications