கனமழையால் சென்னையில் மின் சேவை பாதிப்பு.. எப்போது சீராகும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல்
சென்னை: சென்னையில் மொத்தம் 66,000 ஆயிரம் மின் பயனாளிகளின் வீடுகளுக்குப் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மழைநீர் அகற்றப்பட்ட பின்பு சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்படும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று மாலை கரையைக் கடக்கிறது.
இதனால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடியவில்லை
சென்னையைப் பொறுத்தவரை மேற்கு மாம்பலம், அசோக் நகர், தி நகர், கோடம்பாக்கம், நந்தனம், அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை என பல்வேறு பகுதிகளிலும் நீர் தேங்கியுள்ளது. கனமழையால் தேங்கியுள்ள நீரை மோட்டர் கொண்டு வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், சில பகுதிகளில் 4 நாட்களுக்கு மேலாகியும் மழை நீர் வடியவில்லை. சென்னையில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்,

மின் சேவை பாதிப்பு
மேலும், மழை நீர் தேங்கியுள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக நகரில் பல இடங்களில் மின் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிந்த பின்னரே மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேளச்சேரியில் உள்ள துணை மின் நிலையத்தை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் பேட்டி
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, "சென்னையைப் பொருத்தவரை மொத்தம் 223 துணை மின் நிலையங்கள் பயன்பாட்டில் இருந்தன. நேற்று நள்ளிரவு முதல் மழையின் அளவு அதிகமாக இருந்த காரணத்தினால் பிஎன்சி மில் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய இரண்டு துணை மின் நிலையங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த இடத்தில் தொடர்ந்து மழைநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

66 ஆயிரம் வீடுகள்
சென்னையைப் பொறுத்த வரை மொத்தம் 44 லட்சம் மின் பயனாளிகள் உள்ளன. அவர்களில் 66,000 ஆயிரம் மின் பயனாளிகளின் வீடுகளுக்குப் பாதுகாப்பு கருதி மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைநீர் அகற்றப்பட்ட பின்பு சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்படும்.

களத்தில் மின் துறை ஊழியர்கள்
தற்போது சென்னையில் மட்டும் களத்தில் 4000 மின் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையைத் தவிரப் பிற 8 மாவட்டங்களில் 8000 களப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சாலையின் மட்டமும், துணை மின்நிலைய மின்வாரிய பில்லர் பாக்சின் மட்டமும் ஒரே அளவாக உள்ளது. 2 அடி மழைநீர் தேங்கினாலும் கூட பில்லர் பாக்ஸ் பாதிப்படையும் சூழல் உள்ளது. அடுத்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் பில்லர் பாக்சின் அளவு 1 அடி உயர்த்தப்படும் எனத் தமிழக முதல்வர் மின்வாரிய துறைக்கு உத்தரவிட்டுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

புகார் தெரிவிக்க
சென்னை மாநகராட்சியின் உதவிகளைப் பெற 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் 94454 77205, 94450 25818, 94450 25820, 94450 25821 என்ற எண்களில் வாட்ஸ்அப் செயலியிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின் சேவை குறித்த புகார்களை மின் நுகர்வோர் சேவை மையமான 98987 94987 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு அளிக்கலாம்.












Click it and Unblock the Notifications