தவெகவை முதலை போல விழுங்கும் அதிமுக.. உழைத்தவர்களுக்கு ஏமாற்றம்.. பதவிகளை அள்ளும் மாஜிக்கள்
சென்னை: மாற்றம்.. புதிய அரசியல் என்றெல்லாம் பேசிவிட்டு ஆட்சிக்கு வந்த தவெக கட்சியை தற்போது அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க தொடங்கி உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் அதிமுகவை தவெக உடைப்பது போல தோன்றலாம். ஆனால் கூர்ந்து கவனித்தால்.. தவெகவை அப்படியே அதிமுக விழுங்க தொடங்கி உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த போது, அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் தங்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்றே நம்பினர். ஆனால், தேர்தல் முடிந்து இரண்டே மாதங்களில், தவெகவின் உட்கட்சி அரசியல் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது. கட்சியின் நிர்வாகிகள் பலருக்கும் தங்களுக்கு இனி எதிர்காலம் இருக்குமோ.. இருக்காதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அதிமுகவாக மாறும் தவெக
கடந்த ஒரு வருடத்தில், அதிமுகவிலிருந்து வரிசையாக பல தலைகள் தவெகவில் இணைந்து வருகின்றனர். தொடக்கத்தில் ஒரு சிலர் மட்டுமே அதிமுகவில் இருந்து தவெக வருகிறார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது கொத்து கொத்தாக அதிமுகவில் இருந்து தவெக நோக்கி நிர்வாகிகள் நகர்ந்து வருகின்றனர்.
சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.எஸ். வைகைச்செல்வன், எம்.சி. சம்பத் என ஒரு பெரும் மாஜி அமைச்சர்கள் பட்டாளமே தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் தஞ்சம் புகுந்துள்ளது. இந்த அசுரத்தனமான கட்சித் தாவல், இப்போது தவெகவிற்குள் ஒரு புதிய பூகம்பத்தை வெடிக்கச் செய்திருக்கிறது.
தவெகவை விழுங்கும் அதிமுக
அதிமுகவினர் தவெகவில் இணையவில்லை, மாறாக தவெகவை அதிமுக விழுங்கிக் கொண்டிருக்கிறது, என்ற குமுறல் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடம் இருந்து வெளிவரத் தொடங்கியுள்ளது.
உழைத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு இல்லை
கட்சி ஆரம்பித்த காலம் முதல், போஸ்டர் ஒட்டி, கொடி பிடித்து, தேர்தல் களத்தில் இரவு பகலாக உழைத்த உண்மைத் தொண்டர்களுக்கு இன்னும் முறையான அங்கீகாரமோ, கட்சிப் பதவிகளோ கிடைக்கவில்லை. மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் எனத் தங்களுக்குக் கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருந்த முக்கியப் பதவிகள் அனைத்தும், இப்போது புதிதாக வந்திறங்கியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கும், முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கும் தாராளமாக வாரி வழங்கப்பட உள்ளன.
"கட்சிக்காக நாங்கள் வியர்வை சிந்தி உழைத்தோம். ஆனால், இன்று அதிகாரமும் முக்கியப் பதவிகளும் நேற்று வரை எங்களை எதிர்த்து அரசியல் செய்த அதிமுகவினரின் கைகளுக்குச் செல்கிறது" என தவெகவின் ஆரம்பகால நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதோடு இல்லாமல் இடைத்தேர்தல் முடிந்து.. பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்.. அப்போது தவெக தலைகளுக்கு பதிலாக அதிமுகவில் இருந்து வந்த தலைகளுக்கே அமைச்சரவை பதவி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தவெகவை ஆக்கிரமிக்கும் அதிமுக நிழல்
அதிமுகவின் தொடர் தோல்வி மற்றும் உட்கட்சிப் பூசலால் அங்கிருந்து வெளியேறிய மூத்த தலைவர்கள், தவெகவிற்குள் நுழைந்த வேகத்திலேயே தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தொடங்கிவிட்டனர். பல்லாண்டு கால அரசியல் அனுபவம் மற்றும் பணபலத்தைக் கொண்டு, கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மட்டத்தை நோக்கி அவர்கள் முன்னேறி வருகின்றனர்.
நிலைமை இப்படி நீடித்தால், தவெகஎன்ற புதிய மாற்று அரசியல் சக்தியின் தனித்துவம் அழிந்து, அது மற்றொரு 'அதிமுக'வாக மாறிவிடுமோ என்ற அச்சம் அக்கட்சியினர் இடையே எழுந்துள்ளது.














Click it and Unblock the Notifications