பாலியல் புகார்: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தவெக நிர்வாகி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றதால் சர்ச்சை!
சென்னை: சென்னை ஆலந்தூரில் கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய தவெக பகுதி செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், சனிக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ஆலந்துர் தவெக எம்.எல்.ஏவுடன் வேம்புலி சகஜமாக சுற்றி வந்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆலந்தூரில் சனிக்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகளும் பங்கேற்று மக்களிடம் குறை தீர் மனுக்களை பெற்றுக்கொண்டு இருந்தனர். அப்போது ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ஹரீசும் அங்கே வந்து இருந்தார். அவரும் மக்களிடம் மனுக்களை பெற்று உரிய அதிகாரிகளிடம் வழங்கி கொண்டு இருந்தார்.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற வேம்புலி
அப்போது எம்.எல்.ஏ ஹரிஷுடன் பாலியல் புகாரில் சிறை சென்று வந்தவரும் தவெகவில் இருந்து நீக்கப்பட்டவருமான வேம்புலியும் பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியது. வேம்புலி கடந்த மாதம் ஆலந்தூரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பணி செய்யும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைதானார். இதையடுத்து, தவெகவில் இருந்து வேம்புலி நீக்கப்பட்டு இருந்தார். தற்போது ஜாமினில் வேம்புலி வெளிவந்த நிலையில், அவர் எம்.எல்.ஏவுடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேம்புலி மீதான குற்றச்சாட்டு
சென்னை ஆலந்தூர் மாதவபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் அங்குள்ள உடற்பயிற்சி மையத்தின் பொறுப்பாளாராக பணியாற்றி வருகிறார். கணவரை இழந்த அந்தப் பெண் தனியாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பெண்ணுக்கு செல்போன் மூலம் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை வேம்புலி அனுப்பி வந்துள்ளார். ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளராக இருந்த வேம்புலி, அந்த பெண்ணுக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததோடு, தவெக ஆட்சி அமைந்து இருப்பதால் பணியில் இருந்து நீக்காமல் இருக்க நான் உதவி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
அந்த பெண்ணுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்த வேம்புலி ஒரு கட்டத்தில் எல்லை மீறி சென்றுள்ளார். அதாவது, நள்ளிரவில் வீட்டில் அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் அத்து மீறி சென்று பாலியல் தொல்லை அளிக்க முயன்று இருக்கிறார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்தப்பெண் கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து, வேம்புலி அங்கு இருந்து ஓட்டம் பிடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார்.
இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், வேம்புலியை அதிரடியாக கைது செய்தனர். முன்னதாக தவெகவில் இருந்து வேம்புலி நீக்கப்பட்டு இருந்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் மீண்டும் சகஜமாக ஆளும் கட்சி எம்.எல்.ஏவுடன் வலம் வருவது அப்பகுதி மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமர்சனத்திற்கு உள்ளாகும் தவெகவினரின் செயல்பாடுகள்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் சிலர் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்கு ஆய்வுக்கு செல்வது போன்ற விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது. மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்து பிற நிர்வாகிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று தவெக தலைமை எச்சரித்துள்ள போதிலும் அதை காற்றில் பறக்கவிட்டு தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.
பள்ளிக்கூடங்களுக்கு சென்று ரீல்ஸ் எடுப்பது, முதல்வர் விஜய் புகைப்படத்தை மாட்டுகிறேன் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்ட காட்சிகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே எதிர்ப்பை சம்பாதித்தன.














Click it and Unblock the Notifications