விடாப்பிடி ED.. துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சம்மன்! இன்று விசாரணைக்கு ஆஜராவாரா திமுக எம்பி?
சென்னை: அமைச்சர் துரைமுருகனின் மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ள நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
திமுக பொதுச் செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சராகவும் இருப்பவர் துரைமுருகன். திமுகவிலும், தமிழ்நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அடுத்து சக்திவாய்ந்த தலைவராக அறியப்படுபவர். இவரது மகன் கதிர் ஆனந்த் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேலூர் தொகுதியில் இவர் போட்டியிட்டார். அப்போது, வருமான வரித்துறை அதிகாரிகள் துரைமுருகன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மொத்தம் ரூ.11.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 2019 மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பணம் இது என தகவல் வெளியானது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் அமலாக்கத்துறை கதிர் ஆனந்த் தொடர்பான விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் தற்போது வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வரும் நவம்பர் 28 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
இதேபோல், செம்மண் குவாரி வழக்கில் அமைச்சர் பொன்முடி நவம்பர் 30 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் அவர் ஏற்கெனவே 2 முறை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications