தங்கம் விற்ற நாதெள்ளா ஜூவல்லரி.. எல்லாமே காலி.. 163 கோடி சொத்தினை வங்கியிடம் ஒப்படைத்த அமலாக்கத்துறை
சென்னை: சென்னை தியாகராயநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நாதெள்ளா சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியில் பல கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2018-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து சொத்துக்களை முடக்கியது. இந்நிலையில் எஸ்பிஐ வழக்கின் பேரில், முடக்கப்பட்ட ரூ.163 கோடி சொத்துகளை வங்கியிடம் அமலாக்கத்துறை ஒப்படைத்தது.
சென்னை தியாகராயநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நாதெள்ளா சம்பத் ஜூவல்லரி பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.250 கோடி முதல் ரூ.380 கோடி வரை கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அப்படி கடன் வாங்கிய போது, வங்கிகளுக்கு தவறான நிதிநிலை அறிக்கைகளையும், போலி ஆவணங்களையும் சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கடனுக்கு ஈடாக அடமான வைக்கப்பட்ட சொத்துக்களையும், இருப்புகளையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

வங்கியில் வாங்கிய கடனை அந்த நிறுவனம், சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திரும்பக் கொடுப்பதற்காகவும், நிறுவனத்தின் அன்றாட செலவுகளுக்காகவும் பயன்படுத்தியாகவும் புகார் எழுந்தது. ஆனால், வங்கிகளுக்குத் தெரியாமல் இந்த நிதி வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து நாதெள்ளா சம்பத் ஜூவல்லரி நிறுவனம் கிளைகளை மூடியது. வாடிக்கையாளர்கள் நகை சீட்டு திட்டங்களில் கட்டிய பின்னர், பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் அவதிப்பட்டனர்.
பல கோடிகளில் நடந்த இந்த மோசடி குறித்து கடந்த 2018-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.இந்த வழக்கில் நாதெள்ளா ஜூவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்பிலான 37 அசையா சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகம் அதே நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், 'எஸ்.பி.ஐ. வங்கிக்கு நாதெள்ளா நிறுவனத்தின் மூலம் வரவேண்டிய கடன் தொகை ரூ.163.85 கோடியை பெறும் வகையில் அமலாக்கத்துறை முடக்கம் செய்த அந்நிறுவனத்தின் 37 சொத்துகளில் 27 சொத்துகளை விடுவிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன்படி, ரூ.163.85 கோடி மதிப்பிலான நாதெள்ளா நிறுவனத்தின் 27 சொத்துகளை எஸ்.பி.ஐ. வங்கி வசம் ஒப்படைத்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications