சென்னையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான 3 இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு
சென்னை: சென்னையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்கு (Popular Front of India) சொந்தமான 3 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருந்த சிமி அழைப்பிற்கு கடந்த 2001 இல் மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கடந்த 2006 இல் தொடங்கப்பட்டது.

இது சிமி அமைப்பின் மறுபெயரில் இயங்கும் அமைப்பு என சொல்லப்பட்டது. இந்த அமைப்புக்கு 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. கலவரங்கள், போராட்டங்கள், படுகொலைகள், வெளிநாடுகளிடம் இருந்த பணபரிவர்த்தனை உள்ளிட்ட சம்பவங்களில் பிஎஃப்ஐ அமைப்பினருக்கு தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகள் ,அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது 45 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்ட்தாக தகவல்கள் வெளியாகின.
இதன் தொடர்ச்சியாக டெல்லி, உ.பி. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இணைந்து மீண்டும் சோதனை நடத்தினர். இந்த நிலையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கத்தைச் (சிமி) சேர்ந்த சிலர், பிஎஃப்ஐ அமைப்பின் நிறுவன உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், தடை செய்யப்பட்ட ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்கதேசம் (ஜெஎம்பி), சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் ஆகியவற்றுடன் பிஎஃப்ஐ அமைப்புக்குத் தொடர்பு இருக்கிறது.
இதுதவிர, பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் தீவிரவாதச் செயல்களிலும் இந்த அமைப்புக்குத் தொடர்பு உள்ளது. தங்களுடைய சதித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் ஹவாலா முறையிலும், நன்கொடை என்ற பெயரிலும் பிஎஃப்ஐ அமைப்பு நிதி திரட்டி வருவதும் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் மாநில அரசுகள் பரிந்துரை செய்திருந்தன.
அதன் படி பிஎஃப்ஐ உள்ளிட்ட 9 அமைப்புகளும் 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான 3 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுகிறது. சென்னை பெரியமேடு பகுதியில் பேரக்ஸ் சாலையில் உள்ள இஸ்மாயில் அஸ்தர் என்பவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்படுகிறது.
அது போல் புரசைவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுகிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் இஸ்மாயில் அஸ்தர் ஆவார்.












Click it and Unblock the Notifications