அமலாக்கத்துறை ரெய்டால் தெரியவந்த செந்தில் பாலாஜியின் இதய பிரச்சினை! நன்றி தெரிவிக்கும் திமுகவினர்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருந்த விஷயம், அமலாக்கத்துறை சோதனை காரணமாக தெரியவந்துள்ளது. இதற்காக திமுகவினர் நன்றியும் தெரிவித்துள்ளனர். திமுக அனுதாபியும், கல்வியாளருமான எஸ்கேபி கருணா இதை ட்விட்டரில் கூறியுள்ளார்
இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கதறி அழுததால் அவர் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளும் வெளியானது. இதனிடையே செந்தில் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை கேட்டு, திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு. ரகுபதி, மா சுப்பிரமணியன், சேகர்பாபு உள்பட திமுகவினர் பலரும் ஓமந்தூரார் மருத்துவனைக்கு விரைந்து வந்து நலம் விசாரித்தார்கள். செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் அறை முழுவதும் மத்திய துணை ராணுவப்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
நலம் விசாரித்த பின்னர் பேசிய அமைச்சர் ரகுபதி, செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கூறினார். இதேபோல் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனையில் பேசுகையில், "நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள்; சட்டப்படி சந்திப்போம்" என தெரிவித்தார்.
இதனிடையே முதல்வர் முக ஸ்டாலினே நேரடியாக சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து மருத்துவமனையில் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.
அதன்பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில், "விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து - மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின்அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது . அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி- அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள்." என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதனிடையே செந்தில் பாலாஜியின் உடல் நிலையை ஓமந்தூரரர் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு நெஞ்சுவலி இருப்பதாக கூறப்பட்டதால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின்போது செந்தில் பாலாஜியின் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், "மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய ரத்த நாள பரிசோதனை இன்று காலை 10.40 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்பரிசோதனைகளில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இதை பார்த்த திமுகவினர் : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இறுதயத்தில் அடைப்பு இருந்த விஷயம், அமலாக்கத்துறை சோதனையாலும், அதன்பின்னர் நடந்த மருத்துவ பரிசோதனையாலும் தெரியவந்துள்ளது என்று அமலாக்கத்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
திமுக அனுதாபியும், கல்வியாளருமான எஸ்கேபி கருணா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "தக்க தருணத்தில் ஓடி வந்து எங்கள் அமைச்சரைக் காப்பாற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும், உறுதுணையாக உடன் நின்ற ஒன்றிய அரசுக்கும், இரவெல்லாம் கண்விழித்திருந்த எதிரிகளுக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்னொருவர் வெளியிட்டிருந்த பதிவில், "ஒரு அமைச்சரே அடைப்பு இருக்குறது தெரியாம இருந்திருக்காரு. நமக்கெல்லாம் எத்தனை அடைப்பு இருக்கோ..போய் குச்சிய வச்சு குத்தனும்" என்று கிண்டலாக கூறியுள்ளார். உண்மையில் இதயத்தில் அடைப்பு உள்ளவர்கள் அதை பற்றி ஸ்கேன் செய்து பார்த்து தெரிந்து கொள்ளாமல் விடுவதால், சட்டென உயிரிழக்கிறர்கள். பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதே இப்போதைய வாழ்க்கை முறைக்கு நல்லது. குறிப்பாக 40 வயதை கடந்தவர்கள் நிச்சயம் இதயம் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications