மோதிரம் மாட்டுவதில் அக்கறை.. மருந்து கொடுப்பதில் இல்லையா?.. தவெக அரசுக்கு கனிமொழி கேள்வி!
சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களாகிவிட்டது. ஏராளமான சர்ச்சைகள், புகார்கள் எழுகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய் மாமன் தங்க மோதிர திட்டம் வருகிற 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
தவெக ஆட்சியமைத்து 5 மாதங்கள் ஆகப்போகிறது. தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை தவெக அளித்தது. அவை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வருகிற 28 ஆம் தேதி தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் விழா மதுரை அரசு மருத்துவமனையில் வருகிற 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரத்தை முதல்வர் விஜய் வழங்குகிறார். விழாவுக்கான ஏற்பாடுகள் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும் என்றும், இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா? என்றும் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
உயிர்காக்கும் மருந்துகள்
இதுதொடர்பாக கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படைத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வழங்க முடியாமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத் துறை?. இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா?. குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications
