எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே!
சென்னை: ராயப்பேட்டை எம்.ஜி.ஆர் மாளிகை இன்று வழக்கத்தை விட அதிக பரபரப்பில் இருந்தது. வாசலில் நின்றிருந்த ரத்தத்தின் ரத்தங்கள் முகத்தில் ஒருவித 'கெத்து' தெரிந்தது. காரணம், பல வாரங்களாக இழுபறியில் இருந்த கூட்டணிப் பேச்சுவார்த்தை, இன்று ஒரு வழியாக சுபமாக முடிவுக்கு வந்திருக்கிறது. அதுவும் எப்படி? எடப்பாடி பழனிசாமி டெல்லி சாணக்கிய தலைகளிடம் தன் அரசியல் முதிர்ச்சியைக் காட்டி, சீட் கணக்கில் செக் வைத்திருக்கிறார்.

"40 சீட் வேணும்" எனத் தாமரைத் தரப்பு ஒற்றைக்காலில் நின்றபோது, எடப்பாடி தரப்பிலிருந்து போன பதில் மிகத் தெளிவானது. "25-க்கு மேல ஒரு சீட் கூட கிடையாது." டெல்லிக்கு ஒரு முறை அல்ல, பலமுறை பறந்தும் எடப்பாடி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். பா.ஜ.க தரப்பில் அமித் ஷாவே களமிறங்கியும், "கள நிலவரம் இதுதான்" என புள்ளிவிவரங்களோடு பதில் சொல்லி அதிரவைத்தார் இபிஎஸ். டெல்லிக்கு எடப்பாடியை வரவழைத்து காத்திருக்க வைத்திருந்தும் கூட எடப்பாடி இறங்கி வரவில்லை.
கடைசியில், இன்று சென்னை வந்த தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலிடம், 27 தொகுதிகளை மட்டும் ஒதுக்கி 'டீல்' முடித்திருக்கிறார் எடப்பாடி. இதில் ஹைலைட் என்னவென்றால், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வாங்கிய சீட்டுகளை விட ஒரு சீட் குறைவாகவே பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. "கூட்டணிக்கு நாங்கதான் தலைமை" என்பதைச் செயலில் காட்ட இதுவே சாட்சி!
டி.டி.வி முதல் அன்புமணி வரை... இது எடப்பாடி மாஸ்டர் பிளான்!
ஜெயலலிதா இருந்தபோது 'சசிகலா' நிழலில் இருந்த டி.டி.வி தினகரன், இன்று எடப்பாடியின் தலைமைக்குக் கீழே 11 தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு கைகோர்த்திருக்கிறார். கடந்த முறை 23 இடங்களை வாங்கிய பாமக-வுக்கு, இந்த முறை 18 இடங்கள் மட்டுமே. "ஏற்கனவே ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்தாச்சுல்ல..." என்கிற எடப்பாடியின் லாஜிக்கில் அன்புமணியும் சமாதானமாக வேண்டியிருந்தது.
கூட்டணிப் பங்கீடு ஒரு பார்வை:
பா.ஜ.க - 27 தொகுதிகள்
பாமக - 18 தொகுதிகள்
அமமுக (டி.டி.வி) - 11 தொகுதிகள்
இதர கட்சிகள் (ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் மற்றும் பல) - 8 முதல் 10 தொகுதிகள் வரை.
மொத்தமுள்ள 234-ல், கூட்டணிக் கட்சிகளுக்கு வெறும் 56 இடங்களை மட்டுமே தள்ளிவிட்டு, அ.தி.மு.க நேரடியாக 170-க்கும் மேற்பட்ட இடங்களில் களம் காணத் தயாராகிவிட்டது.
அதிமுக கூட்டணி 2021 பாடம்... 2026 வியூகம்!
கடந்த 2021-ல் பா.ஜ.க 20 இடங்களில் போட்டியிட்டு 4-ல் மட்டுமே வென்றது. பாமக 23-ல் நின்று 5-ல் மட்டுமே வென்றது. இந்த 'ஸ்ட்ரைக் ரேட்'டை கையில் வைத்திருந்த எடப்பாடி, "ஜெயிக்கிற குதிரைக்குத்தான் அதிக இடம்" என கறாராகப் பேசி காரியம் சாதித்திருக்கிறார்.
"எடப்பாடிக்கு கூட்டணி அரசியல் சரியா வரலை" என்று சொன்னவர்களுக்கு.. பியூஷ் கோயல் மற்றும் பலர் என டெல்லி டீமையே எம்.ஜி.ஆர் மாளிகைக்கு வரவழைத்து, தன் கை ஓங்கியிருப்பதை நிரூபித்திருக்கிறார் சேலத்துக்காரர். இப்போது பந்து ரத்தத்தின் ரத்தங்கள் பக்கம். 170 தொகுதிகளில் அ.தி.மு.க-வை ஜெயிக்க வைப்பாரா எடப்பாடி? பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications